எனது பிள்ளை வளர்த்த தென்னை மரங்களின் பலன்களை படையினரே அனுபவிக்கின்றனர்

Report Print Yathu in சமூகம்

எனது பிள்ளை தண்ணீர் ஊற்றி வளர்த்த தென்னை மரங்கள் இப்போது காய்க்கின்றன, ஆனால் அதை அனுபவிக்க எனது பிள்ளையும் இல்லை, எங்களது பூர்வீகக் காணிக்குள் சென்று தேங்காய் பிடுங்கவும் முடியாது.

பணத்திற்கு தேங்காய் வாங்க வேண்டிய நிலையில் இருப்பதாக முல்லைத்தீவில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் தாய் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கேப்பாப்புலவுப் பகுதியில் தங்களது பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி கடந்த பத்து மாதங்களுக்கு மேலாக கேப்பாப்புலவு மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் இன்றும் தொடர்கின்றது.

அத்துடன், காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகள் தொடர்பில் உரிய பதில் கிடைக்க வேண்டுமெனக் கோரி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டமும் பத்து மாதங்களாக இன்றும் தொடர்ந்து வருகின்றது.

இந்த நிலையில் இந்த போராட்டங்கள் இரண்டிலும் நவரத்தினம் இந்திராணி என்ற தாய் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

எங்களது சொந்த நிலமான கேப்பாப்புலவுப் பகுதியில் நான்கு ஏக்கர் காணிகள் எங்களுக்கு இருக்கின்றன. இந்த நான்கு ஏக்கரிலும் இரண்டு ஏக்கர் தென்னை மரங்கள் காணப்படுகின்றன.

ஆனால் இந்தக் காணிகள் இன்று வரையும் விடுவிக்கப்படாது இராணுவத்தினரால் வைத்திருக்கப்படுகின்றது. எங்களது காணிகளை விடுமாறு நாங்கள் பத்து மாதங்களாக இவ்வீதியில் போராடி வருகின்றோம்.

இது ஒரு புறமிருக்க எனது மகன் நவரத்தினம் நவேந்திரன் இறுதி யுத்தத்தின் போது காணாமல் போய் உள்ளார். அவர் பற்றிய எந்த பதிலும் இதுவரை எங்களுக்கு தெரியாது.

எல்லோரும் வருகின்றார்கள், பதிவுகளை எடுக்கின்றார்கள், ஆனால் எந்த முடிவும் இல்லை. நான் பத்து மாதங்களாக அந்த போராட்டத்திற்கும் சென்று வருகின்றேன்.

பிள்ளைக்காக நஸ்டஈடு தருவதாகச் சொல்லுகின்றார்கள். ஆனால் நஸ்டஈடு பெறுவதாக இருந்தால் நான் அதை ஆரம்பத்தில் பெற்றிருப்பேன், பிள்ளை உயிருடன் எங்கோ இருக்கின்றது என்ற நம்பிக்கையில் நான் இன்றும் இருக்கின்றேன்.

எங்களது காணியின் இரண்டு ஏக்கரில் எனது பிள்ளை தண்ணீர் ஊற்றி வளர்த்த தென்னை மரங்கள் இப்போது நன்றாகக் காய்க்கின்றன அதன் பலன்களை படையினரே அனுபவிக்கின்றனர்.

நாங்கள் இப்போது 75 ரூபாவுக்கும், 80 ரூபாவுக்கும் தேங்காயை விலை கொடுத்து வாங்குகின்றோம். எனது பிள்ளையின் உழைப்பினால் உருவான இந்தத் தென்னைகளிலிருந்து ஒரு தேங்காய் ஏனும் எடுக்கவில்லை. பிள்ளையும் இப்போது என்னிடம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.