அரசியல்வாதிகள் பிரதேச வாதத்தை விடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும்!

Report Print Yathu in சமூகம்

அரசியல் தலைமைகள் அரசியல் வாதிகள் தமது வரட்டுக் கௌரவங்களையும், பிரதேச வாதத்தையும் விடுத்து பாதிக்கப்பட்ட தமக்கு உதவ முன்வர வேண்டுமென புதுக்குடியிருப்பு மேற்கு மருதமடுப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மருதமடுப் பிரதேச மக்கள் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

புதுக்குடியிருப்பு மேற்கு மருதமடுக் கிராமத்தில் தற்போது 680ற்கும் மேற்பட்ட மீள்குடியேறி வாழ்ந்து வருவதாகவும், இவ்வாறு வாழ்ந்து வருகின்ற குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டங்கள் கிடைத்திருக்கின்ற போதும், உட்கட்டுமான வசதிகளான வீதிகள் எதுவும் புனரமைக்கப்படவில்லை.

இதனைவிட பல்வேறு தேவையுடைய மாற்றுத்திறனாளிகள் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் எனப் பலதரப்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன.

பெண்தலைமைத்துவக் குடும்பங்கள் பிச்சையெடுத்து வாழ்கின்ற நிலைமை கூட இந்த கிராமத்தில் காணப்படுகின்றது.

மருதமடுக்குளத்தின் கீழ் மானாமோட்டை என்ற பகுதியில் 96 ஏக்கருக்கு மேற்பட்ட வயல் நிலங்களும், கள்ளவேட்டை என்ற பகுதியில் 125 ஏக்கருக்கு மேற்பட்ட வயல் நிலங்களும் பூர்வீகமாக இந்த மக்களாலேயே கடந்த 2009ஆம் ஆண்டிற்கு முன்னர் முப்பது வருடங்களாக பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால், அவற்றுக்கான ஆவணங்கள் வழங்கப்படாது இருந்தன. இப்போது இந்தக் காணிகள் வன இலாகாவினால் மீள்வனமாக்கல் திட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இவ்வாறு பயிர் செய்கை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டமை இந்த பகுதியில் தொழில் வாய்ப்பின்மை என்பன இந்த மக்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கியுள்ளது.

எமது கோரிக்கைகளை எல்லோரிடமும் வைத்திருக்கின்றோம் ஆனால் எவரும் செவிசாய்ப்பதாக இல்லை.

எங்கள் மீது பிரதேச வாதமும் வரட்டுக்கௌரவங்களும் கொண்டிருக்கின்ற அரசியல்வாதிகள் அவற்றை விடுத்து எமக்கு உதவ வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

Latest Offers