வீட்டு முற்றத்தில் கடல்: தொழில் செய்யமுடியாத அவல நிலை

Report Print Yathu in சமூகம்

வீட்டுமுற்றத்தில் கடல் இருக்கின்றபோதும், எமது தொழிலாளர்கள் சுதந்திரமாக தொழில் செய்து வாழ முடியாத அவல நிலையில் இருக்கின்றனர் என முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களினுடைய சமாசத் தலைவர் ரி.அன்ரனி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்ற மக்களில் அதிகளவானோர் கடற்தொழிலையே வாழ்வாதாரத் தொழிலாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

அதாவது நல்லதண்ணீர்த்தொடுவாய் வரைக்கும் பேப்பாறைப்பிட்டி வரைக்குமான 73 கிலோமீற்றர் நீளமான கரையோரப் பகுதிகளில் மீன்பிடித்தொழிலை அன்றாட வாழ்வாதாரத் தொழிலாக முன்னெடுத்து வருகின்றனர்.

சுமார் 5,000இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாக கடற்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும் குறித்த தொழிலாளர்கள் சுதந்திரமாக தொழில் செய்யமுடியாத சூழல் தொடர்ந்து உருவாகியிருப்பதனால் மீனவர்கள் வேறு தொழில்களை நாடி கூலி வேலைகளுக்கும், அரபு நாடுகளுக்கும் செல்கின்ற நிலைமை காணப்படுகின்றது.

எமது மாவட்டத்திலுள்ள கடற்தொழிலாளர்கள் கடந்த 1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் சுதந்திரமாகத் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.

1990ஆம் ஆண்டிற்கு பின்னர் ஏற்பட்ட கடுமையான யுத்தம் கடல்வலயப் பாதுகாப்பு தடைச்சட்டம் போன்றவற்றால் தொழில் செய்யமுடியாத நிலை ஏற்பட்டதுடன், கடற்தொழிலுக்கு சென்ற பல கடற்தொழிலாளர்கள் காணாமல் போயிருந்தனர், இன்னும் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

2000ஆம் ஆண்டிற்கு பின்னர் ஏற்பட்ட ஓர் இடைவெளியில் எமது தொழிலாளர்கள் தமது தொழில்களை மேற்கொண்டு வந்தனர்.

எனினும் அதனைத் தொடர்ந்து 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட ஆழிப்பேரலை காரணமாக கரையோர வாழ் கடற்தொழிலாளர்கள் தொழில் உபகரணங்களையும், உறவுகளையும், சொத்துக்களையும் இழந்துள்ளனர்.

இதன் பின்னர் 2009ஆம் ஆண்டு வரை நீடித்த கடுமையான போரினால் முற்றுமுழுதாக எமது தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மீள்குடியேற்றத்தின் பின்னர் தமது தொழில்களை ஆரம்பித்த தொழிலாளர்கள் பாரிய முதலீடுகளை செய்யும் கடன்களைப் பெற்றும் தொழில்களைத் தொடங்கினர். ஆனால் ஏழு ஆண்டுகள் முடிந்தும் அவர்கள் வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லை.

தற்போது கடல்சீற்றம், இயற்கை அச்சுறுத்தல் இவைபோக அடுத்தடுத்த மாதங்களில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் அதற்கடுத்தபடியாக வெளிமாவட்ட மீனவர்களின் அத்துமீறல்கள் என எமது மீனவர்கள் மீதான நெருக்குதல்கள் தொடர்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.