வடக்குப் பாடசாலைகளை 8 மணிக்கே ஆரம்பியுங்கள்: மாகாண சபையில் வலியுறுத்தல்

Report Print Rakesh in சமூகம்

வடக்கு மாகாணப் பாடசாலைகள் காலை 7.30 மணிக்கு ஆரம்பிப்பதால் மாணவர்களும், ஆசிரியர்களும் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்குகின்றனர், முன்னர் இருந்தமை போன்று 8 மணிக்கே பாடசாலை ஆரம்பிக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை அமர்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் நாளில் கல்வி அமைச்சு மீதான விவாதத்தில் அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் மற்றும் வடக்குமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் ஆகியோரால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் குறிப்பிடுகையில்,

வடக்கு மாகாணத்தில் தற்போது பாடசாலைகள் காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்படுவதால் மாணவர்கள் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

நேரத்திற்கு எழுந்து பாடசாலைக்குச் செல்லவேண்டியிருப்பதால் காலை உணவைக் கூட உண்ணாது செல்கின்றனர். இதனால் அவர்களின் உடல் நிலை சோர்வடைந்து கற்றலைத் தொடர முடியாது அவதிப்படுகின்றனர்.

இதேபோன்றே ஆசிரியர்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாகக் குடும்பப் பொறுப்புள்ள ஆசிரியர்களது பாதிப்புக்கள் பல வகைகளில் காணப்படுகின்றன. ஆகவே இதனைக் கல்வி அமைச்சர் மீள்பரிசீலனைக்கு உட்படுத்தவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவிக்கையில்,

காலை 7.30 மணிக்கு பாடசாலை ஆரம்பிப்பது பொருத்தம் இல்லை, மாணவர்கள் பாதிக்கப்படுபின்றனர். எனவே இதனை அமைச்சர் பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதன்போது சபை இதனை மாற்றச் சம்மதித்தால் பரிசீலிக்கலாம் என்று வடமாகாண கல்வி அமைச்சர் பதிலளித்துள்ளார்.

Latest Offers