பிரதியமைச்சர் ரஞ்சனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஜனவரியில் விசாரணைக்கு

Report Print Steephen Steephen in சமூகம்

நீதிமன்றத்தை அவமதித்தமை சம்பந்தமாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஜனவரி 22ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாளிகாந்தே சுதத்த தேரர் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான சுனில் பெரேரா ஆகியோர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கு புவனேக அலுவிகார, அனில் குணரத்ன, விஜித மலல்கொட ஆகிய நீதியரசர்கள் முன் இன்று ஆராயப்பட்டது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தை அவமதித்த உரை முழுமையாக அடங்கிய குறுந்தகட்டை நீதிமன்றத்திடம் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை அது கிடைக்கவில்லை என கூறியுள்ளார்.

இதனை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதியரசர்கள், குறுந்தகட்டை எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதிக்கு முன்னர் முன்வைக்குமாறு உத்தரவிட்டனர்.

காணொளி பரிசோதிக்கப்பட்ட பின்னர், வழக்கை தொடர்ந்தும் நடத்தி செல்ல முடியாது என வாதிடும் அடிப்படை எதிர்ப்பு தொடர்பான எழுத்து மூல வாதங்களை முன்வைக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதிவாதியான ரஞ்சன் ராமநாயக்க சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.