பேருந்து ஆசனப்பதிவுகளில் ஏற்படும் குளறுபடிகளால் தவிக்கும் பிரயாணிகள்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியாவில் தனியார் பேருந்திற்கான ஆசனங்கள் முன்பதிவு செய்வதில் நடைபெறும் குளறுபடிகளினால் பிரயாணிகள் பெரும் அசௌகரியங்களிற்கு முகம்கொடுப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

வவுனியா தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் கீழ் செயற்பட்டு வரும் தூர பிரதேச பேருந்து சேவைகளிற்காக முன்பதிவு நிலையத்தில் முன்பதிவு செய்யப்படுகின்றது.

எனினும் பேருந்து சாரதி மற்றும் உரிமையாளரிடமும் தொலைபேசி மூலமாக அறிமுகமானவர்கள் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு செய்யப்படும் ஆசன பதிவுகளின் காரணமாக ஒரே இலக்க இருக்கைகள் இருவருக்கு வழங்கப்படுகின்றன. இந் நிலையினால் சிலர் ஆசனப்பதிவு செய்தும் ஆசனங்கள் இல்லாமையால் வேறு பேருந்துகளில் செல்லவேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான செயற்பாடானது குறித்த ஒரு பேருந்தில் அதிகமாக இடம் பெறுவதாக பிரயாணிகள் பலர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது தொடர்பில் குறித்த பேருந்து உரிமையாளரிடம் வினவியபோது,

இவ்வாறான சம்பவங்கள் எமது சேவையில் இடம்பெறுவதில்லை என தெரிவித்ததுடன் நான்கு நாட்களிற்கு முன்னர் எமது பேருந்து ஒன்று பழுதடைந்தமையால் வேறு பேருந்தில் பிரயாணிகளை மாற்றி அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.

அத்துடன் ஆண், பெண் என அருகருகே ஆசனம் அமையும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் வேறு ஆசனங்கள் வழங்கப்படுகின்றன.

மேலும் சிலர் எம்மிடம் ஆசனம் முன்பதிவு செய்து விட்டு பயண நேரத்தின் போது வராமல் இருப்பதோடு சிலர் தொலைபேசியையும் நிறுத்தி வைக்கின்றனர். இதன் காரணமாக எமக்கு ஏற்படும் நஸ்டம் மிக அதிகம் என்று தெரிவித்துள்ளார்.