ஓமந்தை கமநல சேவைகள் நிலையத்திற்கு எதிராக பாரிய குற்றச்சாட்டு

Report Print Theesan in சமூகம்

விவசாயிகளுக்கு பசளைகளுக்கென அரசினால் வழங்கப்படும் 5000ரூபா மானியம் பெறுவதற்காக பொதுமக்கள் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுவதாகவும் ஓமந்தை கமநல சேவைகள் நிலையத்தில் பல மணிநேரம் காத்திருந்த பின்பு அவர்களை “இன்று போய் நாளை வா..” என்ற பாணியில் திருப்பி அனுப்புவதாக பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும் வயது முதிந்தவர்களும் இங்கு வந்து நீண்ட நேரம் காத்திருந்து திரும்ப செல்வதாகவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக வவுனியா மாவட்ட கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் விஜயகுமார் அவர்களை தொடர்பு கொண்ட போது,

குறித்த கமநல சேவைகள் நிலையத்தில் உள்ள அமைப்பினருக்கு குறித்த மானியத்தை பெறுவதற்கு இறுதி தினம் கடந்த 30.11.2017 உடன் முடிவடைந்து விட்டது.

எனினும் 05.12.2017 தொடக்கம் 08.12.2017 வரை தாம் காலவரையறை நீடித்திருந்தும் இதுவரையில் படிவங்கள் முழுமையாக கிடைக்கப்பெறவில்லை.

இதேவேளை குறித்த நிலையத்தின் கீழ் உள்ள அமைப்புகளுக்கு பதிவு தபால் மூலமும் நேரடியாகவும் அறிவுறுத்தல் பதாதைகள் ஒட்டப்பட்டும் இதுவரையிலும் முழுமையாக படிவங்களை குறித்த அங்கத்தவர்கள் எமக்கு கிடைக்க தரவில்லை.

ஓமந்தை மற்றும் செட்டிகுளம் கமக்கார நிலையங்களில் காணப்படும் இது போன்ற காலதாமதத்தினால் 15000 ருபா பணத்தை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு தம்மால் முடியவில்லை என குறிப்பிட்டார்.

எனவே குறித்த சமயங்களில் படிவங்களை கிடைக்கப்பெற செய்திருப்பின் இது போன்ற அசெளகரியங்கள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை எனவும் தெரிவித்தார்.

Latest Offers