இந்தியாவிலிருந்து வைத்தியர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறு சிவாஜிலிங்கம் கோரிக்கை

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

வடமாகாணத்தில் 23 வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் இல்லாத நிலையில் இந்தியாவில் இருந்து வைத்தியர்களை கொண்டுவருவதற்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், தனியார் மருத்துவ கல்லூரிகளும் அதிகளவில் வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மாகாண சபையின் 2018ம் ஆண்டுக்கான பாதீட்டில் சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மீது உரையாற்றுகையிலேயே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கேட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பாக மக்கள் கருத்தறியும் அமர்வில் நான் கலந்து கொண்டு கருத்து தெரிவித்துள்ளேன்.

அதில் ஒரு தனியார் மருத்துவ கல்லூரி அல்ல. 10 தனியார் மருத்துவ கல்லூரிகள் இலங்கையில் கொண்டுவரப்பட வேண்டும் என்பதை கூறியிருக்கின்றேன்.

எங்களுடைய மக்களின் வரிப்பணத்தில் கல்வியை கற்றுவிட்டு, எங்களுடைய மக்களுக்கு சேவை ஆற்ற இயலாத நிலையில் எங்களுடைய வைத்தியர்கள் இருந்து கொண்டிருக்கும்போது தனியார் மருத்துவ கல்லூரிகள் ஊடாக எங்கள் மண்ணுக்கு சேவை ஆற்ற கூடிய வைத்தியர்களை உருவாக்க வேண்டும்.

இங்கே எங்கள் வரிப்பணத்தில் படித்தவர்கள் வெளியே சென்று கொண்டிருக்கும்போது எங்கேயோ படித்து மருத்துவர்கள் ஆனவர்கள் இங்கே வந்து எங்களுடைய மண்ணுக்கு சேவை செய்து கொண்டிருக்கின்றார்கள்.

எனவே வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் இந்திய வைத்தியர்களை வடமாகாணத்திற்கு வரவழைப்பதற்கான அழைப்பினை விடுக்கவேண்டும்.

மேலும் போர்க் காலத்தில் இலங்கை அரசாங்க கட்டுப்பாட்டில் இந்திய வைத்தியர்கள் சேவையாற்றினார்கள். அப்படி என்றால் இப்போது எதற்காக அழைக்க முடியாது” என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் கருத்து தெரிவிக்கையில், “வடமாகாணத்தில் 23 வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் இல்லாத நிலையில் இருக்கின்றன.

அண்மையில் வடமாகாணத்திற்கு வழங்கப்பட்ட வைத்தியர்களில் மேற்படி 23 வைத்தியசாலைகளில் 1 வைத்தியசாலைக்கு மட்டுமே வைத்தியர் வழங்கப்பட்டுள்ளார்” என கூறினார்.

Latest Offers