தாயகம் திரும்ப முற்பட்ட யாழ். இளைஞர் உள்ளிட்ட இருவர் கைது!

Report Print Murali Murali in சமூகம்

இராமேஸ்வரம் - மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து தாயகம் திரும்ப முற்பட்ட இலங்கை அகதிகள் இருவரை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் 2008ஆம் ஆண்டு அகதிகளாக தமிழகம் சென்ற நிலையில், மண்டபம் அகதிகள் முகாமில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில், குறித்த இருவரும் வெகு நீண்ட நாட்களாக அகதிகள் முகாமிற்கு திரும்பாத காரணத்தினால் அவர்களுக்கு அகதிகளுக்கான பதிவு இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மீண்டும் தாயகம் திரும்புவதற்காக தரகர் ஒருவரின் உதவியை பெற்றுக்கொண்டுள்ளனர். பின்னர் சட்ட விரோதமான முறையில் படகு மூலம் தாயகம் திரும்புவதற்கு பணம் செலுத்தியுள்ளனர்.

இது குறித்த தகவல் அறிந்த பொலிஸார் இலங்கை அகதிகள் இருவரையும் கடவுச்சீட்டு வழக்கில் கைது செய்துள்ளதுடன், இவர்களுக்கு உதவி செய்த தரகரையும் கைது செய்துள்ளனர்.