அகதிகள் கடத்தலின் அவல நிஜம்!

Report Print Samy in சமூகம்

அடுத்தவரின் துயரத்தில் சம்பாதிக்க நினைப்பது எவ்வளவு கொடூரமான செயல். அதைச் செய்பவர்கள், இந்த உலகின் மிக மோசமான கடத்தல்காரர்களாகக் கருதப்படுகிறார்கள்.

போதைப்பொருள், தங்கம் போன்றவற்றை விட, மிக மதிப்பானதை இவர்கள் கடத்துகிறார்கள். ஆம், இவர்கள் கடத்துவது உயிருள்ள மனிதர்களை!

சட்டவிரோதமான பாதையில் இன்னொரு நாட்டுக்குச் சென்று பிழைக்க நினைக்கும் மனிதர்களைக் கடத்துவது இவர்களின் தொழில். இதில் சம்பாதிப்பவர்கள் ஒரு பக்கம் என்றால், இந்தக் கடத்தலைத் தடுக்க நினைக்கும் அரசுகள் செய்வது அதைவிடக் கொடூரமான விஷயத்தை!

லிபியாவில் ஆரம்பித்து பல ஆப்பிரிக்க நாடுகளில் உள்நாட்டுப் போர் நடக்கிறது. இராக், சிரியா போன்ற அரபு நாடுகளிலும் இதேபோன்ற நிலை உள்ளது.

உள்ளூரில் இருந்தால் உயிர்கூட மிஞ்சாது என்ற நிலையில், எப்படியாவது பாதுகாப்பான ஒரு தேசத்துக்குப் போக இவர்கள் நினைக்கிறார்கள்.

இப்படி நினைக்கும் எல்லோருக்கும் சொர்க்கமாகத் தெரிவது, ஐரோப்பிய நாடுகள் தான்.

ஆப்பிரிக்க நாடான லிபியாவிலிருந்து மத்திய தரைக்கடலைத் தாண்டிவிட்டால் இத்தாலிக்குப் போய்விடலாம். அதன்பின், உயிர் பயம் இல்லை.

ஏதாவது ஒரு நாடு தங்களை அகதியாக அங்கீகரித்தால், அதன்பிறகு குழந்தைகளை வளர்த்து ஆளாக்கிவிடலாம். இந்த நினைப்பைத்தான் காசாக்குகிறார்கள் கடத்தல்காரர்கள்.

சொந்த தேசத்தில் இருக்கும் தங்கள் சொத்துகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டுவரும் மக்களிடம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பிடுங்கிக் கொள்கிறார்கள்.

பிறகு அவர்களை இரவு நேரத்தில் படகில் ஏற்றிக்கொண்டு மத்திய தரைக்கடலில் பயணிக்கிறார்கள். இத்தாலி கரைக்கு அருகே வந்ததும், லைஃப் ஜாக்கெட்டை மாட்டிவிட்டு, கடலில் அவர்களை குதிக்கச் சொல்லி விட்டு கடத்தல்காரர்கள் எஸ்கேப் ஆகி விடுகிறார்கள்.

கரைவரை கொண்டு போய் விட்டால், இத்தாலி கடற்படை அவர்களைக் கைது செய்யும் ஆபத்து இருக்கிறதே!

இப்படிக் கடலில் குதிப்பவர்களை இத்தாலி கடற்படை காப்பாற்றி விடும். பல நூறு கோடி ரூபாய் புழங்கும் பயங்கரக் கடத்தலாக உலக சமூகம் இதைப் பார்க்கிறது.

ஒருவரைக் கடத்திச்செல்ல 60 ஆயிரம் ரூபாய் முதல் ஒன்றரை லட்சம் வரை வாங்குகிறார்கள். இது தவிரவும் பல கட்டணங்கள் உண்டு.

லைஃப் ஜாக்கெட், தண்ணீர் பாட்டில், போர்வை... எல்லாவற்றுக்கும் தனித்தனிக் கட்டணங்கள். படகில் காற்றோட்டமான மேலடுக்கில் அமர தனி கட்டணம்.

இத்தாலியில் இருக்கும் ஒரு நபரின் நம்பருக்கு போன் செய்தால், அவர் இந்த அகதியைப் பத்திரமாக பிக்கப் செய்து, அங்கிருந்து பாதுகாப்பான இன்னொரு தேசத்தில் கொண்டு போய் விடுவார்.

அதற்கு லட்சங்களில் கட்டணம். இப்படி ‘விலைப் பட்டியல்’ போடாத குறையாக வசூலித்தார்கள். இப்படிக் கடத்தப்படும் அபலைகளின் எண்ணிக்கை மலைக்க வைக்கும்.

2015-ம் ஆண்டில் 10 லட்சம் பேர் இப்படி அகதிகளாக ஐரோப்பா போனார்கள். 2017-ம் ஆண்டில் நவம்பர் வரை கடத்தப்பட்டவர்கள், ஒரு லட்சத்து 16 ஆயிரம் பேர்.

எப்படி இது குறைந்தது? ஐரோப்பிய யூனியன் இதற்காக ‘ஆபரேஷன் சோபியா’ என்ற திட்டத்தில் இறங்கியது. அகதிகளைக் கடத்திய 470 படகுகளை இதுவரை அழித்துள்ளனர்.

கடத்தலில் ஈடுபட்ட 110 பேரைக் கைது செய்துள்ளனர். ஆனால், ‘‘இது ஆபத்தான விளைவுகளையே தந்துள்ளது’’ என்கிறார்கள் ஐ.நா அதிகாரிகள்.

என்ன அவை? இதனால் இப்போது மனிதக் கடத்தலுக்கான ரேட் ஏறி விட்டது. முன்பு நிறைய பேரைக் கடத்தி எவ்வளவு சம்பாதித்தார்களோ, அதே பணத்தை இப்போது சிலரை மட்டுமே கடத்தி சம்பாதிக்க முடிகிறது.

வசதியாகவும் பாதுகாப்பாகவும் இருந்த கடத்தல்காரர்களின் பெரிய படகுகள் பல அழிக்கப்பட்டு விட்டதால், இப்போது ஆபத்தான குட்டி படகுகளில் நிறைய பேரைப் பொதிச்சுமைபோல ஏற்றி வருகிறார்கள். இதனால், பலர் உயிரிழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

எனவே, அகதிக் கடத்தலைத் தடுக்க சட்டவிரோத வழிகளை இப்போது ஐரோப்பிய நாடுகள் நாடியுள்ளன. வந்த பிறகு அவர்களைத் திருப்பி அனுப்புவது கடினமாக இருப்பதால், அகதிகள் கிளம்பும் போதே தடுக்கப் பார்க்கிறார்கள்.

லிபியா கடற்படைக்கு இத்தாலி அரசு இப்போது பணம் கொடுக்கிறது. அங்கிருந்து அகதிகள் கடத்தப்படுவதைத் தடுக்கவே இந்தப் பணம் தருகிறார்கள்.

அகதிகள் கடத்தலில் ஈடுபடுவது சில தீவிரவாதக் குழுக்கள் தான். அவர்களுக்கும் லஞ்சம் கொடுத்து கடத்தலைத் தடுக்கப் பார்க்கிறார்கள். இது கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது.

2015-ம் ஆண்டில் ஈழத் தமிழர்கள் பலர் அகதிகளாக படகுகளில் ஆஸ்திரேலியா போனார்கள். அப்போது, இரண்டு படகுகளை ஆஸ்திரேலிய கடற்படை தடுத்து, அந்தப் படகுகளை ஓட்டி வந்தவர்களுக்குப் பணம் கொடுத்தது.

அகதிகளை ஆஸ்திரேலியாவில் இறக்காமல், இந்தோனேஷியாவுக்குக் கூட்டிச் சென்று இறக்கி விடவே இந்தப் பணம்’’ என்று சொல்லி, இந்தோனேஷியா போவதற்கான வரைபடத்தையும் கொடுத்தது.

அகதிகளுக்கு சட்டபூர்வமாக ஒரு வளமான நாட்டுக்குள் நுழையும் வாய்ப்பைக் கொடுத்தால், அவர்கள் ஏன் சட்டவிரோதமாக வரப்போகிறார்கள்’’ என ஐ.நா-வின் அகதிகளுக்கான ஆணையம் கேட்கிறது.

ஆனால், தீவிரவாதிகளையும் கடத்தல்காரர்களையும் விட அரசுகள் ஆபத்தானவையாக இருக்கின்றன.

- Vikatan