கிளிநொச்சி மாவட்டம் கல்வியில் பின்னோக்கி வருகின்றது! பிரஜைகள் குழு விசனம்!

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி மாவட்டம் கல்வி ரீதியாக திட்டமிட்ட வகையில் பின் தள்ளப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழு தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பில் மத்திய மாகாண அரசுகள் உரிய கரிசனை காட்ட வேண்டும்.

தற்போது மாவட்டத்தின் கல்வி நிலை பின் நோக்கி செல்கின்றது.இலங்கையில் ஒரே ஒரு கல்வி வலயத்தை கொண்ட மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் காணப்படுகின்றது.

83 வரையான ஆரம்ப பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியர்கள் இல்லாத நிலை காணப்படுகின்றது.

இதனைவிட வலயக்கல்வி திணைக்கள நிர்வாகத்தில் உயர் மட்ட ஆளணி வெற்றிடங்கள் நிரப்பப்படாத நிலையில் காணப்படுகின்றன.

உயர் கல்வி உத்தியோகத்தர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர் வெற்றிடங்கள், முகாமைத்துவ உதவியாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், தொழில் வழிகாட்டல் ஆலோசகர்கள் எனப் பல்வேறு வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

இதனால் மாவட்டத்தின் கல்வி பின்நோக்கி செல்கின்றது. இதனை விட வலயக் கல்வி திணைக்களத்திற்கான ஒரு சீரான கட்டிட வசதிகள் இல்லை.

அண்மையில் தொழில் நுட்பப் பிரிவு கட்டிடம் வாகன விபத்தினால் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது.

அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதும், மாவட்டத்தின் கல்வியில் காணப்படும் ஆளணி வெற்றிடங்கள் பௌதீக தேவைகள் என்பன இன்று வரை பூர்த்தி செய்யப்படவில்லை.

இவ்வாறு மாவட்டத்தின் கல்வி தொடர்பில் மாகாண மத்திய அரசுகள் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன எனக் கேள்வி எழுப்பியுள்ள பிரஜைகள் குழு மாவட்டத்தின் கல்வி நிலை மேலும் பின்நோக்கி தள்ளப்படுவதாக விசனம் தெரிவித்துள்ளது.