எம்மை தெருவில் கண்ணீர் வடிக்கவிட்டு சந்தோசமாக வாழ்வது தான் நல்லாட்சியா?

Report Print Yathu in சமூகம்

300 நாட்களாக எங்களை தெருவில் இருந்து கண்ணீர் வடிக்கவிட்டு நீங்கள் சந்தோசமாக வாழ்வது தான் நல்லாட்சியா? என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 300ஆவது நாளாகவும் எதுவித தீர்வுகளும் இன்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். மேலும் கூறுகையில்,

நாங்கள் எங்கள் பிள்ளைகளை, எங்கள் உறவுகளை இராணுவத்திடம் ஒப்படைத்தும், அவர்கள் சரணடைந்தம் இன்று எட்டு வருடங்களாகிவிட்டன. எனினும் இதுவரையில் எங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.

நல்லாட்சியை ஏற்படுத்திய அரசாங்கம் தனது 100 நாள் வேலைத்திட்டத்தில் எங்களது உறவுகள் தொடர்பான பிரச்சினைக்குரிய பதிலை வழங்குவதாகவும், தெரிவித்த நிலையில் நாங்களும் இணைந்து தான் நல்லாட்சியை ஆதரித்தோம்.

ஆனால் எங்களுக்கான வாக்குறுதிகள் எதனையும் இந்த அரசாங்கம் இதுவரை நிறைவேற்றவில்லை. இன்று 300ஆவது நாட்களாக நாங்கள் வீதியில் கண்ணீருடன் துன்பத்திலும், நோயிலும் இருந்து கொண்டிருக்கின்றோம்.

எங்களுடன் போராட்டத்தில் இணைந்திருந்த உறவுகள் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். எங்களது கோரிக்கைக்கு யாரும் செவிசாய்த்து யாரும் இதுவரையில் பதில் வழங்கவில்லை.

கடந்த சித்திரைப் புத்தாண்டு, தீபாவளி எல்லாம் தெருவில் தான் இன்று 300 நாட்கள் தெருவில் இருக்கும் எங்களுக்கு மீட்பரான யேசு பாலகன் பிறப்பின் போதாவது பதில் கிடைக்காதா?

இந்த நல்லாட்சி அரசாங்கம் நல்ல பதிலை தரவேண்டும் என்று நாங்கள் மான்றாட்டமாக கேட்கின்றோம். எங்களை தெருவில் இருந்து கண்ணீர் வடிக்கவிட்டு தாங்கள் சந்தோசமாக இருப்பது தான் நல்லாட்சியா? என்று கேள்வியெழுப்பியுள்ளனர்.