தல பூட்டுவாவின் தந்தங்களை இரசாயனப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தும் பணிகள் ஆரம்பம்

Report Print Steephen Steephen in சமூகம்

கொலை செய்யப்பட்ட கல்கமுவை தந்த யானையின் (தல பூட்டுவா) தந்தங்களை இரசாயனப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய இந்தப் பகுப்பாய்வு நடத்தப்படுகிறது என தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் தம்மிக்க மல்சிங்க தெரிவித்துள்ளார்.

பொலிஸார் கைப்பற்றிய யானைத் தந்தங்கள் கல்கமுவை தந்த யானையின் தந்தங்களா என்பது ஆய்வின் முடிவில் தெரியவரும்.

இதனிடையே தந்த யானையின் யானை முத்துக்களின் பெறுமதியை மதிப்பிடுவதற்கு அவை மாணிக்கக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் யானை முத்துக்களின் விலை மதிப்பு குறித்த அறிக்கை எதிர்வரும் 26 ஆம் திகதி கிடைக்கவுள்ளது.

நீதிமன்றப் பொறுப்பில் இருந்த யானை தந்தங்கள் மற்றும் யானை முத்துக்களை மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு கொண்டு செல்ல தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களப் பணிப்பாளருக்கு மஹாவ நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

யானையை சுட்டுக்கொல்லப் பயன்படுத்தியதாக கூறப்படும் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் அரச இரசாயனப் பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்பதுடன் யானையின் உடல் கூறுகள் மரபணு பரிசோதனைக்கும் அனுப்பி வைக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை.

யானையை சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட மூன்று கிராம சேவகர்கள் உட்பட 9 பேர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பாக பௌத்த பிக்கு ஒருவரை கைதுசெய்ய குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.