வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்திற்கு எதிராக பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பம் நிராகரிப்பு

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்திற்கு முன்னால் வேலையற்ற பட்டதாரிகள் இன்றைய தினம் மேற்கொள்ளவுள்ள போராட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி திருகோணமலை தலைமையகப் பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்தை திருகோணமலை பிரதான நீதவான் எம்.எச்.எம். ஹம்சா நிராகரித்துள்ளார்.

இவ்வருடத்திற்கான அரச நத்தார் விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதிக்கு தமது நிலையை தெரியப்படுத்தும் நோக்கில் திருகோணமலை மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் இன்றைய தினம் போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளனர்.

எனினும் குறித்த போராட்டத்தின் மூலம் மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பிரதான வீதிகளில் நெறிசல் ஏற்படும் என பொலிஸ் புலனாய்வுப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கவுள்ள முகம்மட்ட அப்துல் முகம்மட் ராபி என்பவருக்கு எதிராகவும், ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்கக்கோரியும் திருகோணமலை தலைமையகப் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், வேலையில்லாப் பட்டதாரிகளின் ஆதங்கமும், அவர்களுடைய நியாயமான கோரிக்கையும் அமைதியான முறையில் முன்வைப்பதில் எந்தத் தடையுமில்லை என திருகோணமலை நீதவான் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதத்தில் செயற்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் திருகோணமலை பிரதான நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.