இலங்கையுடனான ஆயுத விற்பனையை பிரித்தானியா நிறுத்த வேண்டும் என கோரிக்கை

Report Print Suky in சமூகம்

இலங்கையுடனான ஆயுத விற்பனையை பிரித்தானியா நிறுத்த வேண்டும் என அந்த நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஹெலன் ஹேய்ஸிடம் (Helen Hayes MP) புலம்பெயர் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேவேளை, இறுதி யுத்தத்தில் தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் போர்குற்ற மீறல் மற்றும் இரும்புக்கரம் ஓங்கிய தற்போதைய இராணுவ மயமாக்கல் குறித்த விபரண ஆவணப்பதிவு நூலும் அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நவீனரக ஆயுதங்களை கொண்டு தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தி முடிக்கப்பட்ட கொடிய யுத்தத்தின் பின்னரும் தற்போதும் இலங்கை அரசின் இரும்புக்கரம் ஒங்கியே காணப்படுகின்றது.

இதன் பிரதான காரணியாக பின்னணியில் ஆயுதக் கொள்வனவே காணப்படுகின்றது.

அந்த வகையில் இலங்கைக்கு ஆயுதங்களைக் விற்பனை செய்யும் நாடுகளில் ஒன்றான பிரித்தானியா அதனை நிறுத்தவும் இதனால் ஈழத்தமிழர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதினை சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு வலியுறுத்தவும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் தமிழ் தகவல் நடுவகத்தின் (TIC) ஏற்பாட்டில் அதன் உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து குறித்த விடயம் தொடர்பில் அவர்களுக்கு தெளிவுபடுத்தி கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலைலேயே, நேற்று (15.12.2017) பிரித்தானியாவின் மேற்கு டல்விச் மற்றும் நோவூட் தொகுதி பாராளுன்ற உறுப்பினர் ஹெலன் ஹேய்ஸை சந்தித்த குழுவினர் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இதன்போது குறித்த விடயம் தொடர்பில் குழுவினருடன் சுமார் அரைமணி நேரத்துக்கு மேல் கலந்துரையாடிய ஹெலன் ஹேய்ஸ், தமிழ் மக்கள் மீதான ஆட்கடத்தல் சித்திரவதைகள் குறித்து தனது விசனத்தை தெரிவித்துள்ளதுடன், இராணுவ அச்சுறுத்தல் குறித்த தனது கவலையையும் வெளியிட்டுள்ளார்.

மேலும், சக பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இதுகுறித்து கலந்தாலோசிப்பதாவும், சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.