யாழ்.சுவை உதயம்: உணவுத் திருவிழா

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

யாழ். மாவட்ட சுற்றுலா ஒன்றியம் யாழ்.மாவட்ட இராணுவ தலைமையகம் ஆகியன இணைந்து முன்னெடுக்கும் உணவுத்திருவிழா யாழ். முற்றவெளித் திடலில் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டது.

வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நேற்றைய நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உணவுத் திருவிழாவை ஆரம்பித்து வைத்தார்.

மூன்று நாட்கள் இடம்பெறவுள்ள இந்த உணவுத் திருவிழாவில் 9 மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உணவுவகைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலும் பிரசித்தி பெற்ற சுவைமிக்க உணவுகளை யாழ்.நகரில் ஒன்றாக சுவைக்க யாழ்ப்பாணம் சுவை உதயம் என்னும் பெயரில் இவ் உணவு கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

குறித்த உணவு விழாவில் யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து நட்சத்திர மற்றும் சுற்றுலா விடுதிகளின் உணவு வகைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் இதன்போது ஆளுநரால் 20 அடி உயரமான நத்தார் மரம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வின்போது, சிறப்பு விருந்தினராக யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி கலந்துகொண்டார்.

அவருடன் 51ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் மேர்வின் பெரேரா, படை உயர் அதிகாரிகள் மற்றும் மதகுருமார்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.