ராஜீவ் கொலை வழக்கு மறுவிசாரணை - மகன் விடுதலையாவான்...! தாயின் அசரா நம்பிக்கை....!

Report Print Vethu Vethu in சமூகம்

""நான் நிரபராதி'' என சிறைக் கம்பிகளுக்குப் பின்னே இருந்தபடி 27 ஆண்டுகளுக்கும் மேலாக தன் மீதான குற்றச்சாட்டுக்காக, தண்டனையை எதிர்த்து நீதிமன்றத்தின் கதவுகளை தட்டிக்கொண்டிருந்த பேரறிவாளனுக்கு தூரத்தில் சிறிய நம்பிக்கை ஒளி தெரிகிறது.

1991-ல் படுகொலை செய்யப்பட்டார் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி. இந்த வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் என 7 பேர் மீதான தண்டனையை உறுதிசெய்தது உச்சநீதிமன்றம். இதில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், வெடிகுண்டு செய்ய பேட்டரி செல் வாங்கித் தந்ததாக சி.பி.ஐ. என் மீது குற்றம்சாட்டியது. ""வெடிகுண்டு தயாரித்தவர்களால் கடையில் சாதாரணமாக கிடைக்கும் பேட்டரி செல்லை வாங்கிக்கொள்ள முடியாதா? என்னை இதில் சி.பி.ஐ. சிக்கவைத்துள்ளது'' என்கிற வாதத்தை வைத்து தடா நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை போராடினார். சிறைக்கதவுகள் திறக்கவில்லை.

இந்நிலையில் "உயிர்வலி' என்கிற பேரறிவாளன் பற்றிய குறும்படத்தில் பேசிய முன்னாள் சி.பி.ஐ. அதிகாரியான தியாகராஜன், ""ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ளவர்கள் உட்பட அனைவரின் வாக்குமூலத்தையும் நான்தான் பதிவு செய்தேன். பேரறிவாளன் என்னிடம் தந்த வாக்குமூலத்தில், "நான் வாங்கிக்கொடுத்த பேட்டரிகளை எதற்கு பயன்படுத்தினார்கள் என எனக்கு தெரியாது. பேட்டரிகள் வாங்கியதற்கான நோக்கம் பற்றியும் எனக்கு தெரியாது' எனச் சொன்னார். இதை அப்படியே பதிவு செய்தால் கொலைக் குற்றச்சாட்டிலிருந்து அவர் சுலபமாக தப்பிவிடுவார் என்பதால், பேட்டரி வாங்கியதற்கான நோக்கம் தெரியாது என்கிற வார்த்தையை நான்தான் வாக்குமூலத்தில் சேர்க்கவில்லை'' என்றிருந்தார்.

இந்த வாக்குமூலத்தை ஆதாரமாக வைத்து 2015-ல் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் பேரறிவாளன். கடந்த அக்டோபர் 17-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். அதில், ""நான் பேரறிவாளன் சொன்னதை முழுமையாக வாக்குமூலத்தில் பதிவு செய்யவில்லை. ராஜீவ் படுகொலை குறித்து சிவராசன், சுபா, தனு ஆகியோருக்கு மட்டுமே தெரியும்'' என அதில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு டிசம்பர் 12-ந் தேதி விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ரஞ்சன்கோகாய், பானுமதி இருவரும், ""இந்த வழக்கில் வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்க முடிவு செய்துள்ளோம். அதன்படி, இரண்டுவிதமான வாதங்களை மட்டுமே வைக்கவேண்டும். அதாவது, பல்நோக்கு விசாரணை கண்காணிப்பு அமைப்பின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும், பேரறிவாளன் மீதான குற்றச்சாட்டு பற்றி வாதிட வேண்டும்'' எனச் சொல்லி வழக்கை 2018 ஜனவரி 24-ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர்கள் கோபால் சங்கரநாராயணன், பிரபு தரப்பிடம் பேசியபோது, ""ராஜீவ் கொலை வழக்கில் மிக முக்கியமானது தனு பயன்படுத்திய பெல்ட் வெடிகுண்டு. இந்த வெடிகுண்டை தயாரிச்சது யார், இதற்கான மூலப்பொருள் எப்படி கிடைத்தது அப்படிங்கற கோணத்தில் இதுவரை விசாரணை நடத்தவேயில்லை. அதை சி.பி.ஐ.யும் ஒப்புக்கொள்கிறது. இதற்கான விசாரணைக்காக 1998-ல் அமைக்கப்பட்ட பல்நோக்கு விசாரணை ஆணையத்தின் விசாரணை தொடங்கக்கூட இல்லை. அப்போதைய காங்கிரஸ் தலைவர் அர்ஜுன்சிங் எழுதிய கடிதத்தில், "இதில் சர்வதேச திட்டமிடல் உள்ளது. அதனால் தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும். இதில் சி.பி.ஐ. கார்த்திகேயன் டீம் தலையீடு இருக்கக்கூடாது' என்றார்.

"விசாரணை முடிந்தபின் தண்டனையை நிறைவேற்றுங்கள், அதுவரை வெளியில் விடுங்கள்' என்பதே நாங்கள் கேட்டது. இந்த வழக்கில் மத்திய அரசை எதிர் மனுதாரராக சேர்த்திருந்தோம். அவர்கள் சேர மறுத்துவிட்டார்கள். இப்போது பேரறிவாளன் -சி.பி.ஐ. என்றே வழக்கு நடக்கிறது. முன்னாள் சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன் தாக்கல் செய்த அபிடவிட்டை ஏற்றுக்கொள்ளக் கூடாது என சி.பி.ஐ. வாதாடியது. நீதிபதிகள், "நீங்கள் ஏன் தற்காலிக விடுதலை கேட்கிறீர்கள், நிரந்தர விடுதலை கேளுங்கள்' என எம்மிடம் கூறியுள்ளார்கள். இந்த வழக்கு இந்திய அளவில் மிக முக்கியமானது'' என்றார்கள்.

இதுபற்றி பேரறிவாளன் தாயார் அற்புதம்மாளிடம் பேசியபோது, ""இதை பெரும் முன்னேற்றமாகப் பார்க்கிறேன். வரும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின்போது என் மகன் விடுதலையாகி என்னுடன் இருப்பான் என்று நம்புகிறேன்'' என்றார் கொஞ்சம் தெம்பான குரலில்.

இந்த வழக்கில் தண்டனை பெற்றுவரும் மற்றவர்களான நளினி, முருகன் தரப்பில் பேசியபோது, ""பேரறிவாளன் தரப்பில் அவரை மீட்கும் வகையில் செயல்படுகிறார்கள். அவர் வெளியே வருவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. வரட்டும்; அவருக்கு இருக்கும் அதே நியாயங்கள், உண்மைகள் எங்களிடமும் உள்ளன'' என்கிறார்கள் அவர்களை சந்தித்துவிட்டு வரும் அவர்களது தரப்பினர்.

நளினி வழக்கறிஞர் புகழேந்தியிடம் பேசியபோது, ""பேரறிவாளன் வாக்குமூலத்தை பதிவு செய்த அதே தியாகராஜன்தான் நளினி உட்பட மற்றவர்களின் வாக்குமூலத்தையும் பதிவு செய்தார். அதோடு, சி.பி.ஐ. தயாரித்த வாக்குமூலத்தில் நளினி உட்பட மற்றவர்களை கையெழுத்திட வைக்க செக்ஸுவல் டார்ச்சர், அடிஉதை என கொடூரமாக டார்ச்சர் செய்துதான் கையெழுத்து வாங்கினார். இதை நளினி, முருகன் உட்பட அனைவரும் அப்போதே நீதிமன்றத்திலும், வழக்கு விசாரணையின்போதும் தடா நீதிமன்றத்திலும் பதிவு செய்துள்ளனர். தற்போது பேரறிவாளன் வாக்குமூலத்தை சரியாக பதிவு செய்யவில்லை எனச் சொல்லும் அந்த அதிகாரி, நளினி மீது தாக்குதல் நடத்தி வாங்கிய கையெழுத்து பற்றியும் சொல்ல வேண்டும் என விரும்புகிறோம். பேரறிவாளன் வழக்கின் போக்கை பார்த்துவிட்டு அதில் கிடைக்கும் முடிவை கொண்டு நாங்கள் மனுதாக்கல் செய்வோம்'' என்றார் நம்பிக்கையுடன்.

- Nakkheeran