கோயில் உண்டியலை உடைத்தவருக்கு நேர்ந்த கதி!

Report Print Steephen Steephen in சமூகம்

தம்புள்ளை பிரதேசத்தில் உள்ள ஆலயம் ஒன்றின் உண்டியலை உடைத்து பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்ற ஒருவர், தம்புள்ளை -கண்டலம வீதியில் விபத்தில் சிக்கியுள்ளார்.

விபத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தம்புள்ளை - கண்டலம வீதியில் கார் ஒன்றும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. முச்சக்கர வண்டியில் பயணித்த நபரே காயமடைந்துள்ளார்.

தம்புள்ளை பொலிஸார் முச்சக்கர வண்டியை சோதனையிட்ட போது அதில் உரப் பை ஒன்றில் சில்லறை காசுகள் மற்றும் ரூபா நாணயத்தாள்கள் இருந்துள்ளன.

இது குறித்து பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணை நடத்திய போது வீட்டில் இருந்த உண்டியலை உடைத்து பணத்தை எடுத்து வந்ததாக முதலில் கூறியுள்ளார்.

இதனை உறுதிப்படுத்த பொலிஸார் சந்தேக நபரின் வீட்டுக்கு அதிகாரிகளை அனுப்பி விசாரித்துள்ளனர். அப்போது அது பொய் என தெரியவந்துள்ளது.

மறுபடியும் விசாரணை நடத்திய போது கலேவலை பிரதேசத்தில் தனது தந்தை ஆலயம் ஒன்றை நடத்தி வருவதாகவும் அங்கிருந்த பணத்தை தனக்கு கொடுத்ததாகவும் சந்தேக நபர் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து பொலிஸார் பிரதேசத்தில் உள்ள விகாரைகள் மற்றும் ஆலயங்களின் நிலைமைகள் தொடர்பாக தேடியுள்ளனர்.

அப்போது கண்டலம குளத்துக்கு அருகில் இருக்கும் ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர், சந்தேக நபர், பொலிஸாரிடம் உண்மையை கூறியுள்ளார்.