போதைப்பொருட்கள் தொடர்பான குற்றச்செயல்கள் குறித்து கடந்த 2016ஆம் ஆண்டில் 79,378 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.
தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு போதைப்பொருட்கள் தொடர்பான குற்றச்செயல்கள் தொடர்பில் 82,482 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2016ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 சதவீத வீழ்ச்சியை காட்டியுள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை குறிப்பிட்டுள்ளது.
35 வீதமானோர் ஹெரோயின் தொடர்பான குற்றங்களுக்காகவும், 60 வீதமானோர் கஞ்சா போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காகவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டில் போதைப்பொருட்கள் தொடர்பான குற்றச்செயல்கள் தொடர்பில் கைதானவர்களின் வீதம் மொத்த சனத்தொகையுடன் ஒப்பிடுகையில், ஒரு இலட்சம் பேருக்கு 350 என்ற அளவில் காணப்பட்டதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.