வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வீடு கட்ட நல்ல நேரம் பார்த்து காத்திருப்பு!

Report Print Aasim in சமூகம்
32Shares

வௌ்ள நிவாரண நிதி கிடைத்த பின்பும் நல்ல நேரம் பார்த்து வீடு கட்டுவதற்காக காத்திருக்கும் பொதுமக்கள் குறித்து காலி மாவட்ட அபிவிருத்திக் குழு கண்டித்துள்ளது.

கடந்த மே மாதம் தென்னிலங்கையில் ஏற்பட்ட வௌ்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் கட்டம் கட்டமாக நிவாரணம் வழங்கி வருகின்றது.

வௌ்ளத்தினால் வீடுகளை இழந்த மக்கள் தமது சொந்த வீடுகளை மீண்டும் கட்டிக்கொள்ளும் வரை வாடகைவீடுகளுக்கான கொடுப்பனவும் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்றது.

இந்நிலையில் காலி நாகொட பிரதேச செயலகத்தில் வௌ்ளத்தினால் வீடுகளை இழந்த மக்களுக்கு அதற்கான நிவாரணம் கிடைக்கப் பெற்றுள்ள நிலையிலும், வீடமைப்பு வேலைகளை ஆரம்பிக்க சுபநேரம் குறித்துக் கொள்ள முடியாமல் அந்த மக்கள் தொடர்ந்தும் வாடகை வீடுகளில் வசித்து வருவது தெரியவந்துள்ளது.

நேற்று நடைபெற்ற காலி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தென் மாகாண சபை உறுப்பினர் நளின் ஹேவகே இது தொடர்பாக கேள்வியெழுப்பியுள்ளார்.

அதற்கு பதில் அளித்த மாவட்ட அரசாங்க அதிபர், குறித்த பொதுமக்கள் வீடமைப்பு வேலைகளை ஆரம்பிக்க சுபநேரம் குறித்துக் கொள்ள முடியாமல் நீண்டநாட்களாக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாரச்சி, நாகொடை பிரதேசத்தில் வீடுகளை இழந்த அனைவரையும் ஒன்று திரட்டி ஒரே நேரத்தில் வீடுகளை அமைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.