இலங்கை அகதிகளிடம் பணம் கேட்டு பொலிஸார் மிரட்டல்! நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

Report Print Murali Murali in சமூகம்

இலங்கை அகதி ஒருவர் தாக்கல் செய்திருந்த வழக்கு தொடர்பில் மண்டபம் முகாம் சிறப்பு துணை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்கள் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. “பணம் கேட்டு பொலிஸார் மிரட்டுவதாக தெரிவித்து இராமநாதபுரம் மண்டபம் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த உதயகலா நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “எனது கணவர், திருச்சி சிறப்பு முகாமிலிருந்து மண்டபம் முகாம் வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டார். இதனால் அவரால் வேலைக்குச் செல்ல முடியவில்லை.

குழந்தைகளை காப்பாற்ற, முகாமில் சிற்றுண்டிக் கடை நடத்தினேன். கியூ பிரிவு பொலிஸார் பணம் கேட்டனர். மறுத்தால் பொய் வழக்கு பதிவு செய்து, 'காவலில் வைப்போம்' என அச்சுறுத்துகின்றனர்.

இந்நிலையில், குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியவில்லை. எனவே, பொலிஸார் தொந்தரவு செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும்” என அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது ''மண்டபம் முகாம் சிறப்பு துணை மாவட்ட ஆட்சியர், இராமநாதபுரம் கியூ பிரிவு பொலிஸ் அதிகாரி ஆகியோர் இருவாரங்களில் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும்'' என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.