விமானக் கழிவறையில் கறுப்பு பைகள்! வெடிகுண்டு சோதனை நடத்திய அதிகாரிகள் அதிர்ச்சி

Report Print Samy in சமூகம்
698Shares

சென்னை, மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அந்த விமானம் சென்னையில் இருந்து மீண்டும் டெல்லிக்கு புறப்பட்டு செல்ல வேண்டும்.

இதற்காக விமானத்தை, விமான நிறுவன துப்புரவு ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது விமானத்தில் உள்ள கழிவறை தொட்டியில் 2 கருப்பு நிற பைகள் இருந்ததை ஊழியர்கள் கண்டனர்.

உடனே விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து சென்று பார்த்தனர்.அந்த பைகளில் வெடிகுண்டு இருக்குமோ? என்ற சந்தேகம் அடைந்த அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்தனர்.

வெடிகுண்டு நிபுணர்கள் வந்து 2 பைகளையும் சோதனை செய்தபோது அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரியவந்தது.

பின்னர் அந்த பைகளை பிரித்து சோதனை செய்த போது அதில் 4 தங்க கட்டிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தங்க கட்டிகள் இருந்த பையை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சுங்க இலாகா அதிகாரிகள் அந்த தங்க கட்டிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

அதில் 4 கிலோ எடை கொண்ட அந்த தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.1 கோடியே 20 லட்சம் என்பது தெரியவந்தது.

துபாயில் இருந்து அந்த விமானத்தில் தங்க கட்டிகளை கடத்தி வந்த மர்ம ஆசாமிகள், விமானம் மீண்டும் உள்நாட்டு விமானமாக டெல்லிக்கு புறப்பட்டு செல்லும் என்பதை அறிந்து, அவற்றை கழிவறையில் மறைத்து வைத்து உள்ளனர்.

அந்த விமானத்தில் உள்நாட்டு பயணி போல் செல்லும் தங்களின் கூட்டாளிகளுக்கு இதுபற்றி அவர்கள் தகவல் தெரிவித்து விடுவார்கள். அவர்களும் அவ்வாறே அந்த விமானத்தில் சென்று தங்கத்தை எடுத்து வந்து விடுவார்கள்.

சுங்க இலாகா அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்க, கடத்தல்காரர்கள் இந்த நூதன முறையை கையாண்டு வருகிறார்கள்.

இதையடுத்து துபாயில் இருந்து அந்த தங்கத்தை சென்னைக்கு கடத்தி வந்தவர்கள் யார்?, உள்நாட்டு பயணியாக சென்று அந்த தங்கத்தை எடுத்து செல்ல வந்தவர்கள் யார்? என்பது குறித்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

- Maalai Malar