மொனராகலை, குடாஓயா பொலிஸ் பிரிவில் தெலுலுல குடியேற்ற திட்டப் பகுதியில் 41 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் கூரிய ஆயுதம் ஒன்றில் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
சட்டரீதியாக திருமணம் செய்யாது, பெண்ணுடன் வாழ்ந்து வந்த நபர் பெண்ணை கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த பெண் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
39 ஆம் பிரிவு தெலுலுல குடியேற்ற திட்டம் என்ற முகவரியில் வசித்து வந்த 41 வயதான ஹக்மனகே தீபானி என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
பெண்ணின் சட்டரீதியான கணவன் உயிரிழந்த பின்னர், பெண், சந்தேக நபரை சட்டரீதியான திருமணம் செய்யாது அவருடன் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் உடல் வெல்லவாய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் வெல்லவாய நீதவான் மரண விசாரணைகளை நேற்று நடத்தியுள்ளார்.
பெண்ணை கொலை செய்த சந்தேக நபரை குடாஓயா பொலிஸார் கைதுசெய்து, வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குடாஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.