முற்றவெளியில் விகாரை அமைக்கப்பட்டால் சகித்துக்கொள்ளமாட்டோம்: எச்சரிக்கும் சிவாஜிலிங்கம்

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்
190Shares

ஆரியகுளம் நாகவிகாரை விகாராதிபதியின் பூதவுடலை தகனம் செய்வதை தொடர்ந்து முற்றவெளி மைதானத்தில் விகாரை அல்லது நினைவிடம் அமைக்கப்பட்டால் அதனை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம் என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

விகாராதிபதியின் பூதவுடல் தகனம் செய்யப்படுவதை நாங்கள் சகித்துக்கொள்கின்றோம், ஆனால் இதனை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொண்டு முற்றவெளியில் விகாரை அல்லது நினைவிடம் அமைக்கப்படுவதை நாங்கள் சகித்துக் கொள்ளமாட்டோம்.

விகாராதிபதியின் பூதவுடல் தகனம் செய்யப்படுவதை எதிர்த்து நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டபோது அங்கு வந்திருந்த பொலிஸார் விகாராதிபதியின் தகன கிரியை தடுத்தால் யாழ்ப்பாணத்தில் அமைதியின்மை உருவாகும் என கூறியிருக்கின்றார்களாம்.

இங்கே வந்து நிற்கும் பௌத்த இனவாதிகளை வைத்துக்கொண்டு அவர்கள் இந்த கருத்தை கூறியிருக்கலாம், ஆனால் நாங்கள் அடக்குமுறைகளுக்கு பயந்தவர்கள் கிடையாது.

முற்றவெளியில் பூதவுடல் தகனம் செய்யப்படுமிடத்தில் விகாரை அல்லது நினைவிடம் அமைக்கப்பட்டால் உண்மையான அமைதியின்மை உருவாகுவதை பார்க்க நேரிடும் என்பதை நாங்கள் அரசுக்கு கூற விரும்புகின்றோம்.

அதேபோல் இங்கே வந்திருக்கின்ற பௌத்த இனவாதிகள் இங்கு அமைதியின்மையை உருவாக்கினால் அதனை தமிழர்கள் பார்த்து கொண்டிருப்பார்கள் எனவும் யாரும் நினைக்கவேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.