தமிழகத்தில் 200 முகாம்களில் தங்கியுள்ள இலங்கை அகதிகளுக்கு இலவச பொங்கல் பரிசு!

Report Print Murali Murali in சமூகம்

தமிழகத்தில் 200 முகாம்களில் தங்கி உள்ள இலங்கை அகதிகளுக்கு இலவச பொங்கல் பரிசு வழங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழக முகாம்களில் வசித்து வரும் இலங்கை அகதிகளுக்கு இலவச புத்தாடைகள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி மாநிலம் முழுவதும் 200 முகாம்களில் தங்கி உள்ள இலங்கை அகதிகள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இது முடிந்ததும், அவர்களுக்கு இலவசமாக பொங்கல் கூப்பன் வழங்கப்படும்.

இந்த கூப்பம் மூலம் ஆண்களுக்கு 118 மதிப்புள்ள வேட்டி அல்லது லுங்கி, ஆண் குழந்தைகளுக்கு 103 மதிப்புள்ள 2 அரைக்கால் சட்டைகள், பெரியவர்களுக்கு 48 மதிப்புள்ள 2 பனியன்களும், சிறுவர்களுக்கு 18 மதிப்புள்ள 2 பனியன்களும், பெண்களுக்கு 162 மதிப்புள்ள சேலை, 46 மதிப்புள்ள 2 டவல்கள், 102 மதிப்புள்ள பெட்டிக்கோட், 36 மதிப்புள்ள பாய் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

இந்த கூப்பன்களை பெற்று கோ-ஆப் டெக்ஸ் கடைகளுக்கு சென்று இலவச பொங்கல் பொருட்களை எடுத்துக்கொள்ளலாம் என்று இலங்கை அகதிகள் மறுவாழ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர் மாவட்டத்தில் மேல்மொணவூர், குடியாத்தம், வாலாஜா, அணைக்கட்டு, மின்னூர், சின்னப்பள்ளிகுப்பம், பாணாவரம் என்று 6 இடங்களில் இலங்கை தமிழ் அகதிகள் முகாம்களில் இயங்கி வருகின்றன.

இம்முகாம்களில் 1100 குடும்பங்களை சேர்ந்த 3,583 பேர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இலவச புத்தாடைகள் வழங்க பொங்கல் கூப்பன் வழங்கப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

- Dina Karan