பொலிஸாரின் சுற்றிவளைப்பில் வாடகை வீட்டிலிருந்து மீட்கப்பட்ட பொருட்கள்

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சம்மாந்துறையிலுள்ள வாடகை வீடொன்றில் இருந்து கஞ்சா மற்றும் ஹெரோயின் போன்ற போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

போதைப்பொருளற்ற நாட்டை உருவாக்குதல் என்ற தொனிப் பொருளுக்கு அமைய இன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செந்நெல் கிராமத்தில் அமைந்துள்ள குறித்த தனியார் வாடகை வீட்டிலிருந்து கேரள கஞ்சா 450 கிராம், ஹெரோயின் போதைப்பொருள் 950 மில்லி கிராம், இலத்திரனியல் தராசுகள், பணம், கையடக்கத் தொலைபேசி போன்ற பொருட்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரின் அடையாள அட்டையும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் குறித்த வீட்டில் வாடகைக்கு இருப்பதாகவும், இதனோடு சம்பந்தப்பட்ட நபர் கல்முனைக்குடியில் நிரந்தரமாக வசிப்பவர் என்றும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.