செய்தி இணையத்தள ஊடகவியலாளர்களுக்கு நெறிமுறைகள் அறிமுகம்

Report Print Steephen Steephen in சமூகம்

இலங்கையின் அரசியலில் தீர்மானகரமான விளைவுகளை ஏற்படுத்திய செய்தி இணையத்தள ஊடகவியலாளர்களுக்கு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை மகிழ்ச்சிக்குரியது என்பதுடன் இது முக்கியமான தீர்மானம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தொழில் இணையத்தள ஊடகவியலாளர்களுக்காக நெறிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்காக கொழும்பு ஜெய்க் ஹில்டன் ஹொட்டலில் இன்று நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

பதவிக்கு வந்து மூன்று வருடங்கள் வரை இணையத்தள ஊடகவியலாளர்களை சந்திக்க முடியாது போனமை குறித்து கவலையடைகின்றேன்.

மிக விரைவில் இணையத்தள ஊடகவியலாளர்களை சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் யோசனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதியளிக்கின்றேன் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, அரச செய்திப் பணிப்பாளர் சுதர்ஷன் குணவர்தன, செய்தி இணையத்தளங்களின் பிரதானிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி உட்பட அதிதிகளை தொழில் இணையத்தள ஊடகவியலாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரடி கமகே வரவேற்றதுடன், சங்கத்தின் செயலாளர் கெலும் ஷிவந்த வரவேற்புரையை நிகழ்த்தினார்.

இணையத்தள ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மட்டுமல்லாது, கடந்த அரசாங்கத்தின் அடக்குமுறைகள், தாக்குதல்கள், ஏற்பட்ட பொருள் சேதங்கள் மற்றும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி நிலைநாட்டப்படுவது தாமதமாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டதுடன் அதற்கான துரித நடவடிக்கை எடுக்குமாறும் கெலும் ஷிவந்த கேட்டுக்கொண்டுள்ளார்.