சிறுவர் பூங்கா வளாகத்தின் மோசமான நிலை! மக்கள் விசனம்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் கழிவுகள் காணப்படுவதுடன் நுளம்புகள் பரவும் வகையில் சூழல் மாசடைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையின் வளாகத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வைத்தியசாலை மேம்பாட்டு பேரவையினால் சிறுவர்களுக்கான விளையாட்டு முற்றம் ஒன்று அமைக்கப்பட்டது.

கடந்த 2009ம் ஆண்டு யுத்தம் காரணமாக கைவிடப்பட்ட குறித்த விளையாட்டு முற்றம் 2010ஆம் ஆண்டு மீள புனரமைக்கப்பட்டு பாவனைக்காக விடப்பட்டது.

தற்போது இந்த விளையாட்டு முற்றத்தில் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வரும் சிறுவர்களும், தங்கி சிகிச்சை பெறும் சிறுவர்களும் தமது பொழுதை இங்கு கழிக்கின்றனர்.

இந்த நிலையில், குறித்த விளையாட்டு முற்றம் மிக நீண்ட நாட்களாக சுத்தம் செய்யப்படாமல் பொலித்தீன் பைகள் அதிகளவில் காணப்படுவதுடன், மழை நீர்த்தேங்கக் கூடிய வகையிலும், பிளாஸ்டிக் மற்றும் உக்காத கழிவுப்பொருட்களும் அதிகளவில் காணப்படுகின்றன.

இதேவேளை, இந்த விளையாட்டு முற்றம் அமைந்துள்ள பகுதிக்குள் கழிவுத்தொட்டிகள் எவையும் வைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றன.

கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு சிகிச்சை வழங்கும் ஒரு வைத்தியசாலை வளாகம் இவ்வாறு சுகாதாரமற்ற முறையில் காணப்படுவது தொடர்பில் பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.