ரோஹிங்கியா அகதிகளை திருப்பி அனுப்பும் பணி விரைவில் தொடங்கும்

Report Print Gokulan Gokulan in சமூகம்

வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியா அகதிகளை மியான்மருக்கு திருப்பி அனுப்புவதற்கானப் பணி விரைவில் தொடங்கும் என வங்கதேச தகவல்துறை அமைச்சர் ஹசனுல் ஹக் இனு நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்திலிருந்து அசாமில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறியும் வகையில் அண்மையில் வெளியிடப்பட்ட அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கூறுகையில், வங்கதேசம் மற்றும் மியான்மாருக்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில் திருப்பி அனுப்பும் பணி கூடிய விரைவில் தொடங்கும்.

எந்த அகதிகள் நெருக்கடியான நிலையில் இருந்தாலும் அது பொருளாதாரத்தையும் பாதிக்கும். ஆனால் அந்த தேர்வில் வங்கதேசம் வெற்றிக் கண்டுள்ளது.

அத்துடன், இந்தியாவை நோக்கி கட்டாய இடப்பெயர்வு நடக்கும் வகையில், வங்கதேச எல்லையோர மாவட்டங்களில் எந்த பெரிய வன்முறையும் கடந்த 40 ஆண்டுகளாக நடக்கவில்லை.

மேலும், உறவினர்கள் என்ற ரீதியிலும் இந்திய எல்லைப்பகுதியோடு எந்த தொடர்பும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர் வன்முறைகளாலும் மியான்மார் இராணுவத்தின் தேடுதல் வேட்டைக் காரணமாகவும் எட்டு லட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

இவர்களை மியான்மருக்கே திருப்பி அனுப்பும் வகையில் இரு நாடுகளுக்கிடையே கடந்த நவம்பர் 2017 இல் ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.