தலவாக்கலையில் வாகன விபத்து: பாடசாலை மாணவன் படுகாயம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

தலவாக்கலை லிந்துலை நகர சபைக்கு முன்பாக பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளான்.

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 6-இல் கல்விகற்கும் (வயது11) மாணவனே விபத்தில் சிக்கி இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

இன்று மதியம் 2 மணியளவில் பாடசாலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த சமயம் நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி வேகமாக மோட்டார் சைக்கிள் பயணித்துக் கொண்டிருந்த போது சடுதியாக குறித்த மாணவன் வீதியை கடந்த போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்களில் மோதுண்ட மாணவன் தலையிலும், காலிலும் அடிப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.

உடனடியாக மீட்கப்பட்ட மாணவன் லிந்துலை வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தநிலையில் வீதிக்கு அருகில் இருந்த வீடு ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டீ.வி கமராவில் இவ்விபத்து தொடர்பான காட்சிகள் பதிவாகியுள்ளன.

இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், மோட்டர் சைக்களின் சாரதியை கைது செய்துள்ளனர்.

கைது செய்த சாரதியை 13.01.2018 அன்று நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சிறுவர்கள் பாடசாலை சென்றுவரும் போது வீதி விபத்துக்கள் தொடர்பில் பாடசாலையிலும் பெற்றோரும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் விபத்து இடம்பெற்ற பகுதியில் இருந்தவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.