தளபாடங்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு பெற்றோர் கோரிக்கை

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை, கந்தளாய் அல் தாரீக் கனிஷ்ட வித்தியாலயத்தில் தளபாடங்கள் பற்றாக்குறை காரணமாக மாணவர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.

குறித்த பாடசாலையில் 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வரும் நிலையில் அரைவாசி மாணவர்கள் தளபாடங்கள் இன்றி நிலத்தில் இருந்து கல்வி கற்று வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால், பாடசாலை விட்டு வீட்டுக்கு பிள்ளைகள் வரும் போது ஆடைகள் அழுக்கடைந்த நிலையில் காணப்படுவதாகவும் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த விடயம் குறித்து பெற்றோர்கள் பாடசாலையின் அதிபர் ஊடாக கந்தளாய் வலய கல்விப் பணிப்பாளர் மற்றும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கும் எழுத்து மூலம் அறிவித்தும் எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, இந்த விடயத்தில் கல்வி உயர் அதிகாரிகள் விரைவில் கூடிய கவனம் செலுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.