தமது சேவைக் காலம் கணிக்கப்பட்டு தமக்கு அநீதி இழைக்கப்படுகின்றது:ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

Report Print Kaviyan in சமூகம்

தமக்கு அரச நியமனம் வழங்கப்பட்டு தாம் சேவையாற்றிய மூன்று வருடங்களைத் தமது சேவைக் காலத்துடன் சேர்க்காது தமது சேவைக் காலம் கணிக்கப்பட்டு தமக்கு அநீதி இழைக்கப்ட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட வன்னிப் பகுதி ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடந்த கால கொடிய யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த அடிப்படை வசதி வாய்ப்புக்களற்ற அதி கஷ்டப் பிரதேசமாக பாடசாலைகளில் நீண்ட காலமாக ஆசிரியர்களபகப் பணி புரிந்து வரும் தமது சேவைக் காலத்தில் மூன்று வருடங்களை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு கருத்திற்கொள்ளாது 3 வருடங்கள் குறைத்தே தமது சேவைக் காலம் கணிக்கப்பட்டுள்ளது.

இதனால், தமது ஆசிரியர் தரம் மற்றும் சம்பளம் போன்ற பல விடயங்களில் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சுக்குப் பாதிக்கப்பட்டவர்களால் பல தடவைகள் தெரியப்படுத்தப்பட்டு தாம் அரச சேவையாற்றிய காலத்தில் மூன்று வருடங்களைக் குறைத்து தமது சேவைக் காலம் கணிக்கப்பட்டுள்ளது.

தமது சேவைக் காலத்தை உரிய முறைப்படி கணியுங்கள் எனத் தெரியப்படுத்தப்பட்ட போதும் செய்யலாம், பார்க்கலாம், காலப்போக்கில் செய்யலாம் எனக்கூறப்பட்டதே தவிர தற்போது வரை தமது சேவைக்காலம் உரிய முறைப்படி கணிக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மூன்று வருடங்கள் கழித்தே கணிக்கப்பட்டுள்ளதாகவும், வடக்கு மாகாணத்தின் புதிய கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் கூட தாம் சேவையாற்றிய காலத்தை தமது சேவைக் காலத்தை உரிய முறைப்படி கணித்து தமது பிரச்சினையைத் தீர்க்க அக்கறை கொள்ளவில்லை எனவும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட ஆசிரியாகள் மேலும் தெரிவிக்கையில்,

வன்னிப்பகுதிப் பாடசாலைகளில் கொடிய யுத்த காலங்களில் ஆசிரியர் பற்றாக்குறை பெருமளவில் நிலவிய போது கடந்த 13, 14 வருடங்களாக தொண்டர் ஆசிரியர்களாக தொடர் சேவையாற்றி வருகின்றோம்.

தமக்கு கடந்த காலங்களில் வடமாகாணத் தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனம்வழங்கப்பட்ட வேளைகளில் வன்னிப் பகுதியைச் சேர்ந்த எமக்கு மட்டுமே நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கப்படவில்லை.

அரசினால் திட்டமிட்டு புறக்கணித்து ஒதுக்கப்பட்டு வந்த வேளைகள் பல இறுதியாக வன்னிப் பகுதியைச் சேர்ந்த நாம் அனைவரும் வவுனியா, செட்டிகுளம் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த போது கடந்த 2009 ஆம் ஆண்டு வடமாகாணத் தொண்டர் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட நிரந்தர ஆசிரியர் நியமனத்தில் கூட வடமாகாணக் கல்வி அமைச்சால் அப்போது வன்னிப் பகுதியைச் சேர்ந்த எவருக்குமே ஆசிரியர் நியமனம் வழங்கப்படாது புறக்கணித்து ஒதுக்கப்பட்டோம்.

முகாம்களிலிருந்து மீள்குடியேறிய பின்னர் வடமாகாணக் கல்வி அமைச்சின் முன் எம்மைப் புறக்கணித்தமையை சுட்டிக்காட்டி எமக்கான நியமனத்தை வழங்குமாறு கோரி பல தடவைகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தோம்.

இதன் விளைவாக கடந்த 01.07.2013 இல் எமக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதாகக் கூறி வடமாகாணக் கல்வி அமைச்சால் ஆசிரிய உதவியாளர் என்னும் நியமனம் வழங்கப்பட்டது.

அப்போது எமது அரச நியமன முதல் நியமனத் திகதியும் 01.07.2013 என சகல பதிவுகளிலும் இடப்பட்டு வந்தது.

ஆனால், தற்போது மூன்று வருடங்கள் குறைக்கப்பட்டு 01.06.2016 இல் இருந்தே எமது சேவைக் காலம் கணிக்கப்பட்டுள்ளது.

எமது சேவைக் காலத்தை நாம் சேவையாற்றிய உரிய காலத்திலிருந்து கணிக்காமல் மூன்று வருடங்களால் குறைத்துள்ளமையால் நாம் எமது சேவைத் தரம் உயர்வு, சம்பள ஏற்றம் போன்றவற்றில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

எனவே, 3 வருடங்களால் குறைத்துக் கணிக்கப்படும் எமது சேவைக் காலத்தை உரிய முறைப்படி எமக்கு நியமனம் வழங்கப்பட்ட 01.07.2013 இல் இருந்து கணிக்க வடமாகாணக் கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் உரிய நடவடிக்கை மேற்கொண்டு உதவ முன்வர வேண்டும் என மேலும் குறிப்பிட்டுள்ளனர்.