மாவடியம்மன் கிராம மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கல்

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சி - வட்டக்கச்சி, மாவடியம்மன் கிராம மக்களுக்கான வாழ்வாதார உதவியாக தற்காலிக வீடுகளும், கோழி மற்றும் அதனை வளர்ப்பதற்கான கூடுகளும் கையளிக்கப்பட்டுள்ளன.

குறித்த உதவி திட்டம் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான உதவிகளை வழங்க தனியார் நிறுவன அமைப்புகள் முன்வந்துள்ளன.

பல வருடங்களாக அடிப்படை வசதிகள் இன்றி பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கிவரும் நிலையில், கல்போனியா, டென்மார்க் மற்றும் இலங்கை போன்ற நாடுகளின் உதவியுடன் டென்மார்கில் இருந்து வாணி தனேஸ்வரனின் தலைமையின் கீழ் செயல்பட்டு வருகின்ற அறிவியல் மாற்றம் சமூக மேன்பாட்டு நிறுவனம் ஒன்று உதவிகரம் நீட்டியுள்ளது.

மாவடியம்மன் கிராம மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கிளிநொச்சி ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து ஊடகங்கள் மூலமாகவும், சமூகவலைத்தளங்கள் ஊடாகவும் இவர்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதனை தொடர்ந்து இந்த கிராமத்தில் வசிக்கும் ஏழு குடும்பங்களுக்கு தலா 75,000 ரூபா பெறுமதியில் தகரத்தினாலான தற்காலிக வீடுகளையும், 14 குடும்பங்களுக்கு 15,000 ரூபா பெறுமதியில் மூன்று மாத ஊர்கோழிக் குஞ்சுகளும், கோழி வளர்ப்பதற்கான கூடும் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன், மாவடியம்மன் கிராம மக்களுக்கு வாழ்வாதாரத்தினை ஊக்குவிப்பதற்கான திட்டம் ஒன்றும், இலவச மாலைநேரக் கற்றல் மற்றும் கற்பதற்கான பொது மண்டபம், பாடசாலை மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி போன்ற செயற்திட்டங்கள் முன்னெடுக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அரசியல் வாதிகளினதும், பல அமைப்புக்களின் பொய் வாக்குறுதிகளை நம்பி எதுவும் இல்லாமல் ஏமாற்றப்பட்ட தங்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி என மாவடியம்மன் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.