கல்லாறு விளையாட்டுக் கழகத்தின் மாபெரும் மரதன் ஓட்டப்போட்டி

Report Print Kumar in சமூகம்

தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பெரிய கல்லாறு பகுதியில் மாபெரும் மரதன் ஓட்டப்போட்டி இன்றைய தினம் நடத்தப்பட்டுள்ளது.

அப்பகுதியிலுள்ள, கல்லாறு விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் குறித்த மரதன் போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

பெரியகல்லாறு சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலய முன்றலில் ஆரம்பமான இந்த மரதன் ஓட்டமானது பெரிய கல்லாறு கிராமத்தினை சுற்றி மூன்று சுற்று நடைபெற்றுள்ளது.

இதன்போது, கல்லாறு விளையாட்டுக்கழகத்தினை சேர்ந்த த.அஜந்தன் முதல் இடத்தினையும், பெரியகல்லாறு கோல்டன் விளையாட்டுக் கழகத்தினை சேர்ந்த உ.தனுஜன் இரண்டாம் இடத்தினையும், பெரியகல்லாறு ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினை சேர்ந்த ஆர்.தனுஸ் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், கல்லாறு விளையாட்டுக்கழகத்தின் தலைவர் பெ.அகிலன், பட்டிருப்பு கல்வி வலயத்தின் முன்னாள் உடற்கல்வி உதவி பணிப்பாளர் கே.நாகராஜா, பெரியகல்லாறு சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலய தலைவர் மு.மன்மதராஜா, பெரியகல்லாறு மத்திய கல்லூரியின் அதிபர் சி.பேரின்பராஜா மற்றும் அப்பகுதி வர்த்தகர்கள் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.