எந்த கட்சிகள் கேட்டாலும் பிரச்சாரங்களுக்கு பொது இடங்களை வழங்க வேண்டியுள்ளது!

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி, பொதுச்சந்தை வளாகத்தில் தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களை நடத்தக் கூடாது என தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில், வர்த்தக நிலைய உரிமையாளர்கள் அல்லாத பலர் கையொப்பமிட்டுள்ளதாக கரைச்சிப் பிரதேச சபையின் செயலாளர் கம்சநாதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பொதுச்சந்தை வளாகத்தில் அரசியல் கட்சிகள் உள்ளூராட்சித் தேர்தல் கூட்டங்களை நடத்த அனுமதிக்கக்கூடாது என 52 பேர் கையொப்பமிட்ட கடிதத்தின் பிரதிகளை கரைச்சி பிரதேச சபை மற்றும் தேர்தல்கள் ஆணையாளர், மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கு அனுப்பி வைத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த கடிதம் தொடர்பில் பரிசீலனை மேற்கொண்டு வருவதாக ஏற்கனவே கரைச்சிப் பிரதேச சபையின் செயலாளர் தெரிவித்திருந்த நிலையில், அது குறித்து இன்றைய தினம் அவரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கோ, அல்லது வேறு தேவைகளுக்கோ பொது இடங்களை கோருகின்றபோது, அதனை வழங்க வேண்டிய பொறுப்பு பிரதேச சபைகளாகிய எங்களுக்கு உள்ளது.

அந்த வகையில் எந்த அரசியல் கட்சிகள் கேட்டாலும், அதனை வழங்க வேண்டியுள்ளது.

இது தொடர்பில் தேர்தடல் தொடர்பான கூட்டங்களிலும் தெரியப்படுத்தியிருக்கின்றோம், கிளிநொச்சி பொதுச்சந்தையில் தற்போது 320இற்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் தினமும் வர்த்தக நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் 52 வரையான வர்த்தகர்களின் பெயர் குறிப்பிட்டு கையொப்பங்கள் பெறப்பட்டு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதில் 52 வரையான வர்த்தகர்களின் பெயர் குறிப்பிடப்பட்டு கையொப்பங்கள் பெறப்பட்டு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, இந்த கடிதம் தொடர்பில் சந்தை வர்த்தகர்களிடம் எமது உத்தியோகத்திர்களால் பரிசீலனை செய்யப்பட்டு அறிக்கையிடப்பட்டதன்படி 13 வரையான வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு உரிமையாளர்களின் பெயருக்கு பதிலாக வேறு நபர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

மேலும், 09 வரையான வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு உரிய விளக்கங்கள் குறிப்பிடப்படாது வேறு விடயங்களை கூறி கையொப்பங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.