பொது மக்கள் முன்மொழிந்த இடங்களில் சூரிய மின்கல விளக்குகள்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையின் கீழ் உள்ள பொதுமக்கள் முன்மொழிந்த இடங்களிலேயே சூரிய மின்கல விளக்குகள் பொருத்தப்பட்டு வருவதாக கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் கணேசன் கம்சநாதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச சபையின் கீழ் உள்ள பகுதிகளில் வீதி மின் விளக்குகளை பொருத்துமாறு பல்வேறு தரப்புக்களும் கோரிக்கைவிடுத்து வருகின்றன.

இந்த நிலையில் அக்கராயன் பிரதேசத்தின் முக்கியமான இடங்களில் வீதி விளக்குகளை பொருத்துமாறு பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில் சூரிய மின்கல விளக்குகள் பொருத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த சந்தர்ப்பத்தில் குறித்த மின்விளக்குகள் பொருத்தமற்ற இடங்களில் அமைக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் கணேசன் கம்சநாதனிடம் வினவிய போது,

கரைச்சி பிரதேச சபையின் கீழ் உள்ள அக்கராயன் பிரதேசத்தில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துகின்ற மக்கள் கூடுகின்ற இடங்களில் மின்விளக்குகளை பொருத்துமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதற்கமைய கடந்த ஆண்டில் அதற்கான நிதி கிடைக்கப்பெற்றது.

இதற்கமைய அக்கராயன் பிரதேசத்தில் உள்ள சன சமூக நிலையங்கள், கிராம மட்ட அமைப்புக்கள், கிராம அலுவலர்கள், பிரதேச செயலாளர் மற்றும் கிராம மக்களால் தெரிவு செய்யப்பட்டு முன்மொழியப்பட்ட இடங்களில் குறித்த மின்விளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளார்.