தங்க நகை வாங்க சென்றவர்களின் மோசமான செயல்: சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்

Report Print Rusath in சமூகம்

ஏறாவூரிலுள்ள நகைக் கடையொன்றில் தங்க நகைகள் வாங்குவதற்காக வந்தவர்கள் அங்கிருந்து சுமார் 3 இலட்சத்து 27 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் திருடிச் சென்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்த நிலையில் பொலிஸார் சீ.சீ.டி.வி காட்சிப் பதிவுகளின் உதவியுடன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டு தேடப்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 02.01.2018 அன்று மாலை இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் சுமார் 3 இலட்சத்து 27 ஆயிரம் ரூபா பெறுமதியான 48 தங்க மோதிரங்களும், 11 தங்கச் சங்கிலிகளும் ஏறாவூரிலுள்ள நகைக் கடையொன்றில் இருந்து திருடிச் செல்லப்பட்டிருந்தன.

இந்த நிலையில் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக விரிவான புலன் விசாரணையில் ஈடுபட்ட ஏறாவூர் பொலிஸார் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சந்தேகநபர்களாக மூவரை அடையாளம் கண்டிருந்தனர்.

சந்தேகநபர்களில் ஒருவரான கோரகல்லிமடுவைச் சேர்ந்த இராசதுரை சந்திரன் (வயது 28) என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நகை கடையிலிருந்து அபகரித்துச் செல்லப்பட்டிருந்த தங்க ஆபரணங்களில் 4 தங்கச் சங்கிலிகளும், 3 மோதிரங்களும் அவரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், சந்தேகநபர் அடையாள அணிவகுப்பில் அடையாளம் காணப்பட்டு எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அந்த நபர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இந்த திருட்டுச் சம்பவத்தோடு சம்பந்தப்பட்ட கோரகல்லிமடு பிரதேசத்தைச் சேர்ந்த மேலும் இருவர் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.