கணவனை இழந்த ஆசிரியைகளிடம் பணம் பறிக்கும் நபர்! வடக்கில் தொடரும் மோசடி

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியாவில் கடமையாற்றும் பாடசாலை ஆசிரியர்களிடம் வட மாகாண திட்டமிடல் கிளையில் இருந்து தொடர்பு கொள்வதாக கூறி பணம் பறித்து வரும் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

வவுனியா பிரபல பாடசாலைக்கு கடந்த வெள்ளிக்கிழமை 0768689726 என்ற இலக்க தொலைபேசியில் இருந்து அழைப்பை எடுத்த நபரொருவர், தான் வட மாகாண திட்டமிடல் கிளையில் பணியாற்றும் என். எஸ். கிரிசாந்தன் எனவும் தங்களது பாடசாலையில் கடமையாற்றும் கணவனை இழந்த ஆசிரியைகளின் விபரங்களையும் கோரியுள்ளார்.

பாடசாலை பிரதி அதிபரும் தமது பாடசாலையில் கற்பிக்கும் கணவனை இழந்த ஆசிரியைகள் இருவரின் தொலைபேசி இலக்கத்தினையும் அவாகளின் சேவைக்காலம் மற்றும் பெயரையும் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் குறித்த நபர் சம்பந்தப்பட்ட ஆசரியர்களுக்கு அழைப்பையேற்படுத்தி வட மாகாண திட்டமிடல் கிளையினால் 7 இலட்சம் ரூபா தங்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அதனை பெறுவதற்கு சனிக்கிழமை 10 மணிக்கு 56 ஆயிரம் ரூபா பணத்துடன் மாகாண அலுவலகத்திற்கு வருமாறும் தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த ஆசிரியர்கள் சுதாகரித்து பாடசாலை அதிபருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அவ்வாறு ஒரு நடைமுறை இருக்குமானால் வட மகாணசபை எழுத்து மூலம் அறிவிக்கும் எனவும் பணத்தினை கொண்டு செல்ல வேண்டாம் எனவும் அதிபர் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் நேற்று திங்கட்கிழமை மாகாண திட்டமிடல் கிளைக்கு தொடர்பை ஏற்படுத்திய அதிபர் குறித்த சம்பவம் தொடர்பாக தெரிவித்த போது அவ்வாறான நபரொருவர் தமது திணைக்களத்தில் இல்லை எனவும் போலியான தகவல் எனவும் கூறியுள்ளனர்.

எனவே இவ்விடயம் தொடர்பாக பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டிய தேவையேற்பட்டுள்ளதாக குறித்த பாடசாலை ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.