வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் கட்சி சார்பாக செயற்படுகின்றார்: சங்கத்தினர் குற்றச்சாட்டு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா வர்த்தக சங்கத்தலைவர் அரசியல் கட்சி ஒன்றின் சார்பாக செயற்படுவதாக அப்பகுதி வர்த்தகர்களால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வவுனியா வர்த்தக சங்கத்தின் தலைவராக தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.கிரிதரன் என்பவரே இவ்வாறு அரசியல் கட்சியின் சார்பாக செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா வர்த்தக சங்கத் தலைவராக இருந்த ரி.கே.இராஜலிங்கம், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதால் அவர் பதவியில் இருந்து விலகியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தியாகத்தலி, அவரது சகோதரன் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதாலும், தேர்தல் காலம் என்பதாலும் அவர் தலைமைப் பொறுப்பை ஏற்கவில்லை.

இந்நிலையிலேயே, தற்போதுள்ள தலைவர் எஸ்.கிரிதரன் தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், ஏற்கனவே உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்சி ஒன்றில் விண்ணப்பித்து இருந்ததுடன் அந்தக் கட்சியில் இவரது வட்டாரத்தில் இவரது உறவினர் ஒருவர் போட்டியிடுவதால் தான் போட்டியிடாது விலகிக் கொண்டதுடன் தற்போது வர்த்தக சங்கத் தலைவர் பதவியைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில், அவர் குறித்த கட்சிக்கு சார்பாக செயற்படுவதுடன், அவர்களது பிரச்சாரக் கூட்டங்கள் சிலவற்றிலும் கலந்து கொண்டுள்ளதாக அப்பகுதி வர்த்தகர்கள் சிலர் விசனம் வெளியிட்டுள்ளனர்.