தொடர் போராட்டத்தில் ஈடுபட்டும் எவ்வித முன்னேற்றமும் இல்லை

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி - இரணைதீவு மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் எந்தவிதமான முன்னேற்றங்களும் ஏற்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இரணைதீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

இரணைதீவு பகுதியை விடுவித்து அங்கு குடியேறி தொழில் செய்வதற்குரிய அனுமதியைப் பெற்றுத்தருமாறு கோரி கடந்த ஆண்டு மே மாதம் முதலாம் திகதி முதல் இரணைதீவு மக்கள் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இது தொடர்பில் அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த ஒன்பது மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற போதும், எங்களது நிலங்கள் விடுவிக்கப்படுவதாக பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டும் இதுவரை எதுவம் நிறைவேற்றப்படவில்லை.

இந்த நிலையில் நாம் தொழில் வாய்ப்புக்களின்றி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். கடந்த ஆண்டு காணிகளை விடுவிப்பது தொடர்பில் கடற்படையினருடன் இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து காணிகளை அடையாளப்படுத்துகின்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

ஆனால் அவற்றை விரைவாக விடுவிப்பது தொடர்பில் எந்தவித முன்னேற்றங்களும் இருப்பதாக இல்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக பூநகரி பிரதேச செயலகத்திடம் தொடர்பு கொண்டுகேட்ட போது,

குறித்த காணிகளை அடையாளப்படுத்தி நில அளவைத் திணைக்கள அதிகாரிகளினால் அளவீடு செய்யப்பட்ட இறுதியறிக்கை இதுவரை கிடைக்கவில்லை.

அவ்வறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னரே குறித்த பிரதேசத்தை விடுவிப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை முன்வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.