8 வருடங்களாக மீனவர்களுக்கு மீன் பிடிக்க அனுமதி மறுப்பு

Report Print Ashik in சமூகம்

மாந்தை - பெரியமடு கிராமத்தில் அமைந்துள்ள குளத்தில் ஈச்சளவக்கை கிராம மீனவர்களுக்கு மீன்பிடித் தொழிலில் ஈடுபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு அனுமதி வழங்கக் கோரி இன்றைய தினம் காலை மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்கு சென்று உதவி பிரதேச செயலாளரிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்துள்ளனர்.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஈச்சளவக்கை கிராம மக்கள் யுத்தத்தினால் இடம் பெயர்ந்து சென்று தற்போது மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மக்கள் வாழ்வாதாரத்திற்காக கடந்த காலங்களில் நன்னீர் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

யுத்தத்தின் பின் மீள் குடியேறியுள்ள நிலையில், பெரியமடு கிராமத்தில் அமைந்துள்ள குளத்தில் நன்னீர் மீன் பிடியில் ஈடுபட பெரியமடு கிராம மக்கள் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர்.

இதனால், ஈச்சளவக்கை கிராமத்தை சேர்ந்த சுமார் 46 குடும்பங்கள் வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2010ஆண்டு முதல் இன்று வரைக்கும் சுமார் 8 வருடங்களாக எங்களுக்கு பெரிய மடு குளத்தில் மீன் பிடிக்க அனுமதி வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால், ஈச்சளவக்கை கிராம மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

குறித்த பிரச்சினைக்கு மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உதவி பிரதேச செயலாளரிடம் வழங்கிய மகஜரில் கூறப்பட்டுள்ளது.