யாழில் பிரபல தனியார் வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ள முடியாது

Report Print Ashik in சமூகம்

யாழில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையின் அறுவை சிகிச்சை கூடத்தில் கிருமித் தொற்றுகை ஏற்படும் சந்தர்ப்பம் உள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் தெரிவித்துள்ளார்.

இதனால், மூன்று சத்திர சிகிச்சை கூடங்கள் இயங்கக்கூடாது என்றும் அறிவித்தல் விடுத்துள்ளார்.

மன்னாரில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

யாழில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையின் அறுவை சிகிச்சை கூடத்தில் தொடர்ந்தும் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளும் போது கிருமித் தொற்று ஏற்படும் சந்தர்ப்பம் உள்ளதாக தனியார் வைத்தியசாலைகளை ஒழுங்கு படுத்தும் சபை அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் தனியார் வைத்தியசாலை ஒன்றில் கடந்த வருடம் கண் சத்திர சிகிச்சைக்கு உற்படுத்தப்பட்ட பலர் பாதிப்புக்களை எதிர் கொண்டுள்ளனர்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கண் சத்திர சிகிச்சைக்கு உற்படுத்தப்பட்ட நோயாளிகள் பலருக்கு நோய் தொற்றுக்கு உற்பட்டிருந்தார்கள்.

இவ்வாறு சத்திர சிகிச்சைக்கு உற்படுத்தப்பட்ட பலர் பார்வையினை இழந்த நிலையில், உடனடியாக குறித்த வைத்தியசாலை நிர்வாகத்தினருக்கு அறிவித்தல் வழங்கப்பட்டது.

ஆனால், குறித்த வைத்தியசாலையின் ஒத்துழைப்பு எங்களுக்கு பூரணமாக கிடைக்கவில்லை.

இதன் பின்னர் மத்திய சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட விசேட நிபுணத்துவக்குழுவினர் வந்து குறித்த தனியார் வைத்தியசாலையில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த தனியார் வைத்தியசாலையின் அறுவை சிகிச்சை கூடத்தில் பல்வேறு குறைபாடுகள் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறைபாடுகள் சீர் செய்யப்படும் வரைக்கும் குறித்த வைத்தியசாலையினுடைய அறுவை சிகிச்சை கூடத்தில் தொடர்ந்தும் சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டால் கிருமித்தொற்றுகையை ஏற்படுத்த சந்தர்ப்பம் உள்ளது என அறிவித்துள்ளனர்.

இவ்விடையம் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எங்களுக்கு அறிவித்துள்ளனர்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட 10 நோயாளிகளுக்கும் நஷ்ட ஈடு அல்லது நிவாரணம் போன்ற சில விடையங்களை செய்ய வேண்டும் என்றும் அறிக்கையின் ஊடாக முக்கியமான சிபாரிசுகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகுதி அற்றவர்கள் கூட அங்கே கடமையாற்றுவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தொடர்புடைய வைத்தியசாலை நிர்வாகத்திற்கு குறித்த அறிக்கையுடன் சேர்த்து அறிவுறுத்தல்களை வழங்க இருக்கின்றோம்.

இந்த அறிவுறுத்தல்களுக்கு அமைவாக செய்யப்பட்ட சிபாரிசுகளுக்கு அமைவாக வைத்தியசாலை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு திருத்தி கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் வைத்தியசாலையினுடைய சத்திர சிகிச்சை கூடத்தை இயங்க விடலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

அது வரைக்கும் குறித்த மூன்று சத்திர சிகிச்சை கூடங்களும் இயங்கக்கூடாது என நாங்கள் அறிவித்தல் வழங்குவதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை, எமது திணைக்களத்திற்கு வைத்தியசாலை நிர்வாகம் ஒத்துழைக்கும் என நாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு ஒத்துழைப்பு வழங்காது விட்டால் குறித்த அறிக்கைக்கு அமைவாக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார்.