வவுனியா பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் புதிய சர்ச்சை

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் அமையும் பொருளாதார மத்திய நிலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 ஏக்கர் நிலப்பரப்பில் 3 ஏக்கர் அமைச்சர் ஒருவருக்குச் சொந்தமாக உள்ளதாகவும், அதில் வேறொரு கட்டடம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

வவுனியாவில் அமையவுள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கு மத்திய அரசாங்கத்தினால் 200கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

அந்த பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பதா தாண்டிக்குளத்தில் அமைப்பதா என்ற மக்கள் பிரதிநிதிகளின் இழுபறி நிலையில் குறித்த பொருளாதார மத்திய நிலையம் மதகுவைத்தகுளத்தில் அமைப்பதற்கு காலம் தாழ்த்தி முடிவு எடுக்கப்பட்டது.

இதில் பொருளாதார மத்திய நிலையத்தை இரண்டாகப் பிரித்து 100 கோடி ரூபாயில் அமைப்பதற்கும், மிகுதியாக உள்ள 100கோடி ரூபாக்கு மாங்குளத்தில் கடலுணவு செப்பனிடும் பொருளாதார நிலையம் அமைப்பதற்கு பயன்படுத்துவதற்கு வடமாகாண முதலமைச்சர் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் விவசாய அமைச்சர் ஆகியோர் இணைந்து முடிவு எடுக்கப்பட்டது.

ஆனால் குறித்த பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக்குளத்தில் அமைத்திருந்தால் 200கோடி ரூபாவில் அமைத்திருக்க முடியும். தற்போது மதகுவைத்தகுளத்தில் அமையப் பெற்றுள்ள பொருளாதார மத்திய நிலையம் முடிவுறும் கட்டத்தை நெருங்கியுள்ளது.

மாங்குளத்தில் அமையவுள்ள கடலுணவு பொருளாதார நிலையத்திற்கு என்னவாயிற்று என்று தெரியவில்லை.

வவுனியாவில் 5அரை ஏக்கரில் அமையவேண்டிய பொருளாதார மத்திய நிலையம் 2அரை ஏக்கரில் அமைந்துள்ளதுடன் மிகுதியாகவுள்ள மூன்று ஏக்கர் காணி அமைச்சர் ஒருவருக்குச் சொந்தமாகவுள்ளதாகவும் அதில் வேறொரு கட்டடம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்படும் போதிலிருந்து ஆரம்பமான சர்ச்சைகளுக்கு இன்றுவரை முடிவில்லை.

பொருளாதார மத்திய நிலையத்தில் 50 கடைத் தொகுதிகள் அமையப்பெற்றுள்ளதுடன் அதில் தற்போது வவுனியா தினச்சந்தையிலுள்ள 35பேருக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மிகுதியாகவுள்ள 15 கடைத் தொகுதிகள் ஆளும் கட்சி அமைச்சர்கள் இருவரும் வன்னி மாவட்ட ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கும் பகிர்ந்தளிக்கப்பட உள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதனிடையே வவுனியாவில் அண்மையில் ஒரு குழுவினர் ஒன்றிணைந்து நாடாளுமன்ற உறுப்பினருடன் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதில் 5அரை ஏக்கரில் அமைய வேண்டிய பொருளாதார மத்திய நிலையம் 2அரை ஏக்கரில் அமைந்துள்ளது தொடர்பாகவும் மிகுதியாக உள்ள மூன்று ஏக்கர் காணியில் அமைக்கப்படும் கட்டடம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதற்கு குறித்த நாடாளுமன்ற உறுப்பினர், இது தொடர்பாக தான் நாடாளுமன்றத்திற்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.