மதுபானங்களை கொள்வனவு செய்யும் உரிமை பறிப்பு! 11 பெண்கள் வழக்கு

Report Print Steephen Steephen in சமூகம்

பெண்கள் மதுபான விற்பனை நிலையங்களில் தொழில்புரியவும், மதுபானங்களை கொள்வனவு செய்யவும் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்தமைக்கு எதிராக நடிகை சமன்மலி ஷானிகா பொன்சேகா உட்பட 11 பெண்கள் இன்று உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டதன் காரணமாக பெண்களின் சமவுரிமை மீறப்பட்டுள்ளதாக கூறியே இவர்கள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

நிஷாந்தி பண்டாரநாயக்க, எம்.டி.ஜே.பி. பெர்னாண்டோ, சமன்மலி ஷானிகா பொன்சேகா, சந்திமா ரவினி ஜினதாச, தீபான்ஜலி அபேவர்தன, சப்ரினா எசூலி, சரண்யா சேகரம், ரந்துலா டி சில்வா, மேனகா கல்கமுவ, சுஜாதா கமகே, விகாசா பெரேரா திலக்கரட்ன ஆகியோர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.

மனுவில் பிரதிவாதிகளாக நிதியமைச்சர், நிதியமைச்சின் செயலாளர் சமரதுங்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 12(1) மற்றும் 14(1) ஆகிய பந்திகளின் கீழ் அனைவரும் சரிசமமானவர்கள் என கருதும் உரிமை மீறப்பட்டுள்ளதாகவும், இதனால் பெண்கள் மதுபான விற்பனை நிலையங்களில் பணிப்புரியவும் மதுபானங்களை கொள்வனவு செய்வதையும் தடுப்பது அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் எனவும் மனுதார்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.