தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு

Report Print Nesan Nesan in சமூகம்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாடுகளையும், ஒப்பந்தங்களையும் நிறைவேற்றக்கோரி தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த ஊழியர்கள் இன்று ஒரு மணி நேர அடையாள பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவிக்கையில்,

எம்.சி.ஏ. கொடுப்பனவு 5 வருடத்திற்குள் 100% வரை அதிகரித்துக் கொள்வதற்கான இணக்கப்பாட்டுக்கு அமைய 2018 ஜனவரி மாதம் கிடைக்கவேண்டிய 20% அதிகரிப்புக்குரிய சுற்று நிரூபத்தை இதுவரை வழங்கவில்லை.

இந்த இணக்கப்பாட்டில் 1(iv) ஐ முறித்துக்கொண்டு 2017.06.15 ஆம் திகதி ஆணைக்குழு சுற்றுநிரூப இலக்கம் 13/2017 மூலம் ஒரு பிரிவினருக்கு மட்டும் 15% இல் கொடுப்பனவுகளை அதிகரித்தல் மற்றும் அதனை இதுவரை கல்விசாரா ஊழியர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்காமை.

இணக்கப்பாட்டில் 1(ii) இற்கு அமைய அந்த கொடுப்பனவு 2016-01-01 திகதியில் முன்னுரிமை செய்வதற்கு நடவடிக்கை எடுக்காமை.

இடை நிறுத்தப்பட்டிருக்கின்ற மொழிக்கொடுப்பனவுவை வழங்குவதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமல் இருத்தல்.

பல்கலைக்கழக சமூகத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சொத்துக் கடன் முறையில் கல்விசாரா ஊழியர் சமூகத்துக்கு வழங்கப்பட்டுள்ள இடைக்கால கடன் எல்லையை விலக்கி சகல தரப்பினருக்கும் உச்ச கடன் எல்லையை 02 மில்லியன் ஆக்குதல்.

சகல பல்கலைக்கழக சமூகத்திற்கும் பயனான வைத்தியக் காப்புறுதி முறை மற்றும் ஓய்வூதிய சம்பள முறை ஒன்றினை தயாரித்தற்கான ஆக்க பூர்வமான வேலைத்திட்டங்களை இதுவரை செயற்படுத்தாமை போன்ற விடயங்களை கண்டித்தே இந்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் 23ஆம் திகதி உயர் கல்வி அமைச்சருடன் இடம்பெறவுள்ள சந்திப்பில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்காத விடத்து தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.