கிளிநொச்சியில் உள்ளூர் தேவைக்கு பத்தாயிரம் லீற்றர் பால் பயன்பாடு

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற பாலில் பத்தாயிரம் லீற்றர் வரையில் உள்ளூர் தேவைக்கு பயன்படுத்தப்படுவதாக மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார பணிப்பாளர் எஸ்.கௌரிதிலகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டத்தில் திறந்தவெளி வளர்ப்பு முறையிலான கால்நடைகளே அதிகம் உள்ளன. உள்ளக வளர்ப்புமுறைகளில் குறைந்த பண்ணையாளர்களே கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.

தற்போது 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் மாவட்டத்தில் இருக்கின்றன. நாளொன்றுக்கு இருபத்தி இரண்டாயிரம் லீற்றர் வரையான பால் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இதில் 12 ஆயிரம் லீற்றர் பால் பண்ணையாளர்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்படுகின்றது. ஏனைய பத்தாயிரம் லீற்றர் பால் உள்ளூர் தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறிப்பிட்ட சில பகுதிகளில் பால் சந்தைப்படுத்துதலில் சிரமங்கள் மற்றும் பாலுக்கான விலைத்தளம்பல் என்பன காணப்படுவதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுகின்ற பண்ணையாளர்கள் தமது திணைக்களங்களிடம் தொடர்பு கொண்டால் அதற்கான நடவடிக்கைகளை செய்து கொடுக்கமுடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.