தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்தில் வெறும் பெயருக்காக மட்டுமா தமிழ்?

Report Print Shalini in சமூகம்

இலங்கையின் 70ஆவது தேசிய சுதந்திர தினம் இன்று காலை காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

குறித்த நிகழ்வுகள் சமூகவலைத்தளங்களிலும், தொலைக்காட்சிகளிலும், நேரடியாக ஒலிபரப்பட்டிருந்தன.

சுதந்திர தின கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்று முடிந்திருந்தாலும், தமிழ் மக்கள் மத்தியில் ஒரு குறைப்பாடு காணப்படுவதை இங்கு குறிப்பிட வேண்டும்.

அதாவது இலங்கையில் தமிழ் மொழியும் அரசகரும மொழியாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில் ஏனைய மொழிகளுக்கு வழங்கப்படும் முன்னுரிமை தமிழ் மொழிக்கும் வழங்கப்பட வேண்டும்.

இந்த விடயத்தில் அரசாங்கத்தை குறை கூற முடியாது. காரணம் அரச கரும மொழிகள் அமைச்சராக ஒரு தமிழரே இருக்கின்றார்.

இந்த அரசாங்கம் தமிழ் மொழிக்கு வழங்க வேண்டிய அந்தஸ்தை சகல வழிகளிலும் தந்துள்ளது என்றே கூறவேண்டும்.

ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் குறைப்பாடுகள் தான் தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துகின்றன.

இன்று நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு 3 மொழிகளிலும் குரல் கொடுக்கப்பட்டாலும் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிக்கு வழங்கப்பட்ட முன்னுரிமையும், விளக்கமும் தமிழ் மொழியில் போதுமான அளவு வழங்கப்படவில்லை.

ஒவ்வொரு நிகழ்வுகளையும், சிங்கள மொழியில் மிகவும் தெளிவாக அறிவித்தவர்கள் தமிழில் சிறிய ஒரு விளக்கத்தையே கொடுத்துள்ளார்கள்.

இந்த விடயம் தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.