சர்ச்சைக்குரிய பிரிகேடியர் பிரியங்கவின் பதக்கங்கள் அகற்றப்படவில்லை என குற்றச்சாட்டு

Report Print Kamel Kamel in சமூகம்

பிரிட்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றி வரும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் பதக்கங்கள் அகற்றப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

படைவீரர்களின் திறமைகளுக்கு அங்கீகாரமாக பதக்கங்கள், நட்சத்திரங்கள் வழங்கப்படுகின்றன.

அவ்வாறு பிரிகேடியர் பிரியங்கவிற்கு வழங்கப்பட்ட பதக்கங்கள், நட்சத்திரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக இணைய ஊடகங்களில் வெளியாகியிருந்த தகவல்கள் பொய்யானவை என அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரிகேடியர் பிரியங்கவின் பணி இடைநிறுத்தப்படவில்லை எனவும், குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் இலங்கையின் சுதந்திர தின நிகழ்வு லண்டனில் நடபெற்ற போது புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு போராட்டமொன்றை நடத்தியிருந்தனர்.

இதன் போது கழுத்தை அறுப்பதாக பிரிகேடியர் பிரியங்க சைகை மூலம் போராட்டக்காரர்களை எச்சரித்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டு காரணமாக தற்காலிக அடிப்படையில் பிரியங்கவின் பணி இடைநிறுத்தப்பட்டிருந்தது.

எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கு அமைய பணி இடைநிறுத்தம் ரத்து செய்யப்பட்டு கடமையில் இருக்கும் போதே குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பிரிகேடியர் பிரியங்கவிடம் வாக்குமூலமொன்று பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், குற்றச்சாட்டு குறித்து விசாரணைகளை இராணுவம் மட்டுமே செய்ய வேண்டுமென வெளிவிவகார அமைச்சு கோரினால் விசாரணைகள் நடத்தத் தயார் என இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.