இலங்கையிலிருந்து தமிழகம் சென்ற 9 மாத கர்ப்பிணி பெண்ணின் நிலை

Report Print Ashik in சமூகம்

இலங்கையிலிருந்து தனுஷ்கோடிக்கு சென்ற குடும்பத்தினரிடம் தமிழக பாதுகாப்பு தரப்பினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று அதிகாலை தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கடல் பகுதியில் பலத்த பாதுகாப்பையும் மீறி மன்னார் பகுதியிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கண்ணாடியிலைப் படகில் சென்றுள்ளனர்.

இவர்களில் 9 மாத கர்ப்பிணித்தாய் உட்பட நான்கு பேரிடம் உளவுத்துறை, கியூபிரிவு சுங்கத்துறை மற்றும் பொலிஸ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் மன்னார் பகுதியைச் சேர்ந்த நிரோசன் (28) பெயின்டர் வேலை செய்து வருவதாகவும் வருவாய் இன்றி கஷ்டத்தில் இருப்பதால் தனது மனைவி மேரிஸ்டெல்லா (23) ஒன்பது மாத கர்ப்பிணியுடன் தனது ஐந்து வயது பெண் குழந்தை ஜாஸ்மின் மற்றும் சகோதரர் ரீகன் உள்ளிட்ட நான்கு பேருடன் தனுஸ்கோடிக்கு சென்றுள்ளனர்.

இலங்கை மன்னார் பகுதியில் கண்ணாடியிலைப் படகு ஒன்றில் 60 ஆயிரம் ரூபாய் கொடுத்து தனுஷ்கோடிக்கு இன்று அதிகாலை வந்ததாக தெரிவித்துள்ளனர்.

கடந்த 1990 ல் இலங்கையில் நடைபெற்று வந்த யுத்த காலத்தில் அகதிகளாக வந்து மண்டபம் முகாமில் தங்கியிருந்ததாகவும் கடந்த 2011ல்மண்டபம் அகதி முகாமிலுள்ள அரசு மருத்துவமனையில் தனது மனைவிக்கு வயிற்றில் ஆப்ரேசன் செய்து மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளார்.

பின் கடந்த 2012ல் பாஸ்போர்ட் மூலம் இலங்கைக்கு திரும்பிச் சென்றனர், மீண்டும் தற்போது பிரசவத்திற்க்காக இங்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவர்களிடம் விசாரணை நடத்திய பொலிஸார் கடவுச்சீட்டு இன்றி இந்தியாவுக்குள் நுழைந்ததாக வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.