யாழ். சிறையில் தந்தை: இந்தியாவில் மகன் பரிதாபமாக பலி! கண்ணீரில் உறவுகள்

Report Print Shalini in சமூகம்
யாழ். சிறையில் தந்தை: இந்தியாவில் மகன் பரிதாபமாக பலி! கண்ணீரில் உறவுகள்
1371Shares

யாழ். சிறையிலுள்ள இந்திய மீனவரான ஜெயசீலனை, அவரது மகனின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பரோலில் விடுவிக்குமாறு இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

எல்லை தாண்டி சட்டவிரோத மீன்பிடிப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காக கடந்த மாதம் 15ஆம் திகதி இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த 16 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ். சிறையில் அடைத்துள்ளனர்.

சிறுநீரகம் பாதிக்கப்பட்ட மீனவர் பூன்டிராஜ், ஜெயசீலன் முனியசாமி, கர்மேகம், பூபாண்டி, ராதகிருஷ்ணன், பாலா, முத்துக்குமார், ராயப்பன் ராமர் உள்ளிட்ட இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த 16 பேர் இதில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் மீனவர் ஜெயசீலனின் ஒரே மகன் ஸ்டீபன் இன்று காலை காலைக் கடன் கழிக்க கடற்கரைப் பகுதிக்கு சென்றபோது திடீரென வலிப்பு ஏற்பட்டு கடலில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், “தனது கணவர் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் தானும் தனது மகனும் தவித்து வருகிறோம். ஏற்கனவே எனது மகன் ஸ்டீபன் வலிப்பு நோயால் பாதிப்படைந்து சிகிச்சைபெற்று வரும் நிலையில் எனது கணவரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்ற செய்தி அறிந்த நாள்முதல் மனநிலையும் பாதிக்கப்பட்டு இருந்தார்.

இருந்த ஒரே மகனையும் இழந்து விட்டேன்” என குறித்த மகனை இழந்த தாயார் மீனா கவலையுடன் தெரிவித்துள்ளார்.

மகனின் இறுதிச் சடங்கிற்கு மீனவர் ஜெயசீலனை விடுவிக்க வேண்டும் என குடும்பத்தார் கண்ணீருடன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து இந்திய தூதரக அதிகாரிகள் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஜெயசீலனை பரோலில் விட அனுமதி கோரி மனு செய்துள்ளனர்.

மனுவை விசாரித்த நீதிபதி எம்.எம்.ரீயால் மீனவரை பரோலில் விடுவிக்க சட்டமா அதிபரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், பரிந்துரைக்கடிதம் கிடைக்கப்பட்டவுடன் மகனின் இறப்புச் சான்றிதழை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து பரோலில் எடுத்து சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.